மன்ற விளவின் மனை

181
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்,
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு,
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும்
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை,
5
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை,
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்;
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன்
பகைப் புலம் படராஅளவை, நின்
10
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.

திணையும் துறையும் அவை.
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.