முகவுரை

"ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்."

(தண்டியலங்காரவுரை மேற்கோள்)

வரலாற்றிற் கெட்டாத தொன்முது பழங்காலத்திற் குமரிக் கண்டத் தென்கோடியில் தோன்றியதும், நாகரிக மாந்தனூலைத் (Cultural Anthropolohy ) தொடங்கி வைத்ததும், உலக முதற்றாயுயர் தனிச் செம்மொழியுமான ஒண்டீந்தமிழி லெழுந்த முதலிரு கழக நூல்களும் ஆரியரா லழியுண்டபின், எஞ்சியுள்ள பண்டைத் தமிழ்நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிநிற்கும் இருபெருந் தூண்கள், ஒல்காப் பெருமைத் தொல்காப்பியமும் தருக்கற மறையாந் திருக்குறளுமாகும். இவற்றுள், முன்னது கற்றோர்க்கன்றி மற்றோர்க்கு ஏலாமையின், பின்னதே பொதுமக்கட்கும் புலமக்கட்கும் ஒப்ப வேற்கும் முழுமுதல் விழுநூலாம்.

இந்நூற்குப் பதினான்காம் நூற்றாண்டிற்குமுன் உரைவரைந்த ஆசிரியர் பதின்மர்.

"தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்."

(தனிப்பாடல்)

இவருள் மணக்குடவர், பருதி, பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் என்னும் ஐவருரையே இன்று நமக்குக் கிடைப்பன. மணக்குடவரை மணக்குடியர் என்றும், பருதியை பரிதியென்றும், காலிங்கரைக் காளிங்கர் என்றுங் குறிப்பர்.

இவ்வைவருள்ளும் காலத்தாற் கடைப்பட்டவரும் உரைத்திறத்தால் தலைசிறந்தவரும் பரிமேலழகரே யாவர். இவரையும் இவருரையையும் சிறப்பித்துக் கூறும் பாக்கள் வருமாறு.-

"வள்ளுவர்சீ ரன்பர்மொழி வாசகந்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளியசீர்த்