"விரைத்தா ரலங்கல் திருவள்ளுவர் முன்னம் வெண்குறட்பா
நிரைத்தார் மிகுபொருள் நான்கும் விளங்க நெறிப்புலவர்
உரைத்தார் பலரும் அதற்குரை தன்னை யுலகறியக்
கருத்தான் வகுத்தமைத் தான்கலை தேர்ஒக்கை காவலனே".

(பெருந்தொகை,1547)

"வள்ளல் சிலைப்பெரு மாள்நச்சர் சாத்தர் வழுதிமுதல்
தள்ளுவ னார்க்குந் தலையான பேரையும் தன்னுரையை
விள்ளுவ னார்க்குந் திருக்காஞ்சி வாழி பரிமேலழகன்
வள்ளுவ னார்க்கு வழிகாட்டி னான்றொண்டை மண்டலமே".

(தொ. ம. சத. 41)

இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய நச்சுக் கருத்துக்களை, முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக்கொண்டு புகுத்தியிருப்பது, இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது. இனி, சில
குறள்கட்கு முழுத்தவறாகவும்சில குறள்கட்கு அரைத்தவறாகவும் பொருள் கூறியுள்ளார். சில தென்சொற்களை வட சொல்லாகக் காட்டியிருப்பதுடன், சில சொற் கட்குத் தவறான இலக்கணவமைதியுங் கூறியுள்ளார்.

பரிமேலழகர் வழுவியுள்ள வழிகள் : - 

1. ஆரிய வழி காட்டல் 

எ - டு : "தத்துவ மிருபத்தைந்தினையுந் தெரிதலாவது.....சாங்கியநூலு ளோதியவாற்றான் ஆராய்தல்" (27 ஆம் குறளுரை )

"இவர் பொருட்பாகுபாட்டினை அறம்மொருளின்பமென வடநூல் வழக்குப்பற்றி யோதுதலான்" (களவியல் முகவுரை).