சில சிறப்புக் குறிப்புக்கள்

வடசொல்நேர் தென் சொற்கள் :

  உபசரித்தல் என்னும் வடசொல் சார்த்திக் கூறுதல் என்னுந் தென் சொல்லாலும், காரணம் என்னுஞ் சொல் கரணியம் அல்லது கரணகம் என்னும் வடிவினாலும், காரியம் என்னுஞ் சொல் கருமகம் அல்லது கருமியம் என்னும் வடிவினாலும், குறிக்கப்பட்டுள.

ஒருபொருட் பலசொற்கள் : 

மன்னன் என்பது குறுநிலவரசனையும் வேந்தன் என்பது அவனை யடக்கியாளும் பெருநில வரசனையும் சிறப்பாகக் குறிக்குஞ் சொற்களேனும், இவ்விரண்டும் மோனை யெதுகை தளைநோக்கி வேறுபாடின்றியே பல குறள்களிலும் ஆளப்பட்டுள்ளன.

இலக்கணக் குறிப்புக்கள் : 

அன்னது, பாலது என்னும் சொற்கள் ஈற்றின் அகர முதல் கெடின் அற்று பாற்று எனத் திரிந்து நிற்கும். இறந்தகால வினை யெச்ச வடிவோடு ' அற்று ' க் கூடி வருமிடமெல்லாம் பெயரெச்சம் + அற்று என்றே உரை நெடுகலும் பிரிக்கப்பட்டுள்ளது. 

எ - டு : நிறைந்தற்று = நிறைந்த அற்று. உவமையின் இரு கூறுகளும் உவமம் (உவமானம்) பொருள் (உவமேயம்) என்றே குறிக்கப்பட்டுள்ளன. 

'இன்' என்னும் நீக்க வேற்றுமையுருபிற்கு உறழ் பொருளே யுரியதெனினும், அது பொருந்தாத இடங்களிலெல்லாம் செய்பொருள் வேற்றுமைக்குரிய ஒப்புப் பொருளே கொள்ளப்பட்டுள்ளது. 

ஆகுபெயர் போன்று ஆளப்பட்டுள்ள பெயர்களையெல்லாம் ஆகு பெயரென்றே பரிமேலழகர் குறித்துள்ளார். அவை இங்கு ஆகு பொருளி ( இலக்கணை) என வேறுபடுத்தப்பட்டுள்ளன. இடைச் சொல்லாக ஆளப்பட்டுவரும் மன்னோ, மாதோ என்னுஞ் சொற்கள் முதற்காலத்தில் முறையே அரசே, பெண்ணே என்று பொருள்பட்டு ஆடூஉ முன்னிலையாகவும் மகடூஉ முன்னிலையாகவும் இருந்தன வேனும், இங்கு உரையாசிரியன்மார் கருத்திற்கேற்ப மன் + ஓ, மாது + ஓ யென்றும் பிரிக்கப்பட்டுப் பொருந்துமிடமெல்லாம் இடைச் சொற்பொருள் கூறப்பட்டுள்ளன.