நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய ஒருசிறைப்பெரியனார், மருதனிள நாகனார், ஒளவையார், கருவூர்க் கதப்பிள்ளை ஆகிய நால்வரும் அவனை
நாஞ்சிற் பொருநன் என்றே குறிக்கின்றனர். பொருநன்
போர்மறவன் அல்லது படைத்தலைவன்.
"பொருந
ரென்ப பெரும்போர்த் தலைவர்."
என்பது பிங்கலம் (5: 119)
பாண்டிநாட்டிற்கும்
சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நாட்டை யாண்டதினால், ஒருகாற் பாண்டியனுக்கும் மற்றொருகாற் சேரனுக்கும் படைத்தலைவனாக இருந்ததாகத் தெரிகின்ற
நாஞ்சில் வள்ளுவனை, வலிமையிலும் வண்மையிலும் சிறந்தவனாக மருதனிள
நாகனாரும் ஒளவையாரும் கதப்பிள்ளையும்
பாடியிருத்தலால், அவன் பெயர் வலிமையாலோ வண்மையாலோ
வந்ததாகவுமிருக்கலாம்; இயற்பெயராகவுமிருக்கலாம்.
வல்லப
என்னும் வடசொல், வேரில்லாததாகவும் காதலன்,
நண்பன், கணவன், மேலோன், கண்காணி என்றே
பொருள்படுவ தாகவும் இருத்தலால், அது வள்ளுவன் என்னும் தென்சொற்கு
மூலமாயிருத்தல் முடியாது. கல்வெட்டுக்களில் வரும் வள்ளுவன் வல்லுவன் என்னும் சொற்களும், தூய
தென்சொற்களேயன்றி வல்லப என்னும் வடசொல்லின்
திரிபாகா. உண்மை யெதுவெனின், வல்லவன் என்னும்
தென்சொல் வடமொழியில் வல்லப என்று திரிந்துள்ளது
என்பதே. வகரம் பகரமாவது வடமொழிக்கியல்பே.
ஆண்மகன் என்னும் சொல் கணவனையும் ஆண்டகையென்னுஞ் சொல் சிறந்த தலைவனையுங் குறித்தல் போன்றே,
வல்லவன் என்பதன் திரிபான வல்லப என்பதும்
வடமொழியில் கண்காணிப்புத் தலைவனையும்
கணவனையும் காதலனையும் நண்பனையும் முறையே குறித்ததென்க.
குடி
: திருவள்ளுவர் அரசனின் முரசறை விளம்பரத்
தலைவரா யிருந்தாரெனின், அவர் பிறந்த குடி வள்ளுவக்
குடியென்றே கொள்ளலாம். கடைக் கழகக் காலத்திற்
பிராமணர் தம்மை மேன் மேலுயர்த்தத் தமிழரைப்
படிப்படியாய்த் தாழ்த்தி வந்தாரெனினும், கடைப்பட்ட
வகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு இக்காலத்திற் போல் அக்காலத்தில் இழிவு இருந்ததில்லை. அதனால், இக்கால
நிலைமைபற்றித் திருவள்ளுவரை வள்ளுவக் குடியினரென்று கொள்வது அவருக்கிழுக்காகும் என்று கருதுவது
அறியாமையின் விளைவேயாம்.
|