"பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ."

(பரிமேலழகருரைச் சிறப்புப் பாயிரம்)

"ஆலும் வேலும் பல்லுக் குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி."

(பழமொழி)

என்பனவும்; புலமைச் சிறப்பை,

"புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல் நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்."

என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்; கருத்துப் பரப்பை,

"மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து."

என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்; சுருங்கச் சொல்லலை,

"தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட 
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி."

என்னும் திருவள்ளுவமாலைப் பாவும்; விளங்கவைத்தலை,

"பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்."

என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்; உணர்த்தும்.

இங்ஙனம் திருக்குறள் எல்லா வகையிலும் ஒப்புயர்வற்ற உலகத்தமிழ் நூலாம். அதனால், முப்பொருண்மை பற்றி முப்பால், முப்பால் நூல் என்றும்; ஆசிரியனை நோக்கி வள்ளுவம், வள்ளுவநூல், வள்ளுவப்பயன் என்றும்; உண்மை யுரைத்தல் பற்றிப் பொய்யா மொழி என்றும்; மந்திரத்தன்மைபற்றி வள்ளுவர் வாய்மொழி யென்றும் மறைத்தன்மை பற்றித் தமிழ்மறை, பொதுமைற என்றும், தெய்வத்தன்மை பற்றித் தெய்வநூல் என்றும்;