"வேம்புங் கடூவும் போல வெஞ்சொல்
தாங்குதலின்றி வழிநனி பயக்குமென் 
றோம்டைக் கிளவியின் வாயுறுத்தல்"

பற்றி வாயுறைவாழ்த்து என்றும் ; பெயர் பெற்றுள்ள தென்க.

முதனூன்மை : திருக்குறள் எல்லாவகையிலும் தூய முதனூ லாகும். அறம் பொருளின்பம் என்னும் முப்பொருளையும் பற்றித் திருக்குறள் முறையிற் கூறும் வடநூல் ஒன்று மில்லை. நான்முகன் (பிரமன்) முதலில் 'திரிவர்க்கம்' என்னும் பெருநூலைச் செய்தானென்றும், அதை வியாழனும் (பிருகற்பதி) வெள்ளியும் (சுக்கிரன்) சுருக்கி முறையே பார்கற்பத்தியம் சுக்கிரநீதி என்னும் நூல்களை இயற்றின ரென்றும், திருவள்ளுவர் 'திரிவர்க்கம்' போல் அறம் பொருளின்பம் பற்றி நூல் செய்ததனாலேயே நான்முகனின் தோற்றரவு (அவதாரம்) எனக்கருதப் பெற்றாரென்றும், தமிழ்ப் பற்றில்லாத பிராமணத் தமிழ்ப் புலவர் கூறுவர். ஒருவரோ பலரோ கட்டிப் பாடிய திருவள்ளுவமாலையில்,

"நான்மைறயின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மைறந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறை"

என்று உக்கிரப்பெருவழுதி பெயரிலுள்ள பாவும்,

"மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்."

என்று காவிரிப் பூம்பட்டினத்துக காரிக்கண்ணனார் பெயரிலுள்ள பாவும், எல்லா அறநூல்களையும் மறைநூல்களையும் ஆரியவேத வழிநூலாகக் கொள்ளும் பண்டை மரபு பற்றிக் கூறியதைக் கொண்டு அவர் அங்ஙனங் கூறுகின்றார் போலும்.

மேற்காட்டிய பாப் பகுதிகளில் நான்மறையென்றும் வேதமென்றும் குறித்திருக்கின்றதே யொழிய, திரிவர்க்கமென்று குறிக்கப்பட வில்லை. இதற்கு முற்றும் மாறாக,

"தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்
ஆனா வறமுதலா வந்நான்கும் - ஏனோருக்
கூழினுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று".