எனவுள்ளது நக்கீரர் பெயரிலுள்ள பாட்டு.

நான்முகன் தேவியாகச் சொல்லப்படும் நாமகள் பெயரிலுள்ள பாட்டு,

"நாடா முதனான் மறைதான் முகனாவிற்
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு."

என்பது. இதிலும் திரிவர்க்கக் குறிப்பில்லை.

மேலும், திருவள்ளுவர் முப்பாலால் நூற்பொருளுங் கூறினாரேயன்றி, முதல் முப்பொருளை மட்டும் கூறினாரல்லர். மக்களால் இயற்றப் பட்ட முப்பானூல் வடமொழியில் இல்லாததினாலேயே, 'திரிவர்க்கம்' என்பது நான்முகனால் இயற்றப் பெற்றதென்றும், "ஓடிப்போன முயல் பெரிய முயல்." என்பதற்கொப்ப அது மகாசாஸ்திரம் என்றும், கூறுவாராயினர் என்க.

இனி, கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியரும் அவர் மாணவராகிய காமந்தகரும் எழுதிய பொருள்நூற் கருத்துக்கள் திருக்குறளிற் பயின்று வருவதால், அதன் பொருட் பாலுக்கு வடமொழி 'அருத்த சாத்திரம்' முதனூலென்பர் தமிழ்ப் பகைவரும் போலித்தமிழரும்.

"தொன்று தொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்" என்று பரிமேலழகராலும் பழைமை கூறப்படும் மூவேந்தர்குடிகளும், அவற்றுள்ளும் சிறப்பாகப்

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் சொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் குடி"

வரலாற்றிற் கெட்டாத தொன்றுதொட்டுத் தென்னாட்டையாண்டு வருவதாலும்,

"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு."

"பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை."

"மதிநுட்பம் நூலொ டுடையார்க் கதிநுட்டம்
யாவுள முன்னிற் பவை."