வாழ்க்கைத்துறையிலும் ஆட்சித்துறையிலும் மட்டுமன்றிச் சமயத் துறையிலும் பொதுவாயிருப்பதால் பொதுமறை யெனப்பட்டது.

"ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் 
அன்றென்ப ஆறு சமயத்தால் - நன்றென 
எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார் 
முப்பால் மொழிந்த மொழி" - திருவள்ளுவமாலை.

காலவரம்பின்மை :

திருக்குறள் இத்துணைக்காலந்தான் அல்லது இன்ன நூற்றாண்டு வரைதான் பயன்படுமென்று எவருஞ் சொல்லுதற்கிடமின்றி, எக்காலத்திற்கும் ஏற்றதாயிருப்பதும் அதன் ஏற்றங்களுள் ஓன்றாம்.

கோவரசும் (Monarchy) குடியரசும் (Democracy) மக்களாட்சியும் (Republic) கூட்டுடைமையும் (Socialism) நீங்கி உலகெங்கும் பொதுவுடைமை (Communism) வரினும்,அதற்கும்,

"பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை."

"பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது."

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான்."

என்னுங் குறள்கள் இடந்தரும் என்க.

மறையியல் :

திருக்குறள் இம்மைக்குரிய ஒழுக்க வரம்பு கூறும் அறநூலாக மட்டுமன்றி, மறுமையில் உயர் பிறப்போ விண்ணின்பமோ வீட்டின்பமோ பெறுதற்குரிய வழிகாட்டும் மறைநூலாகவுமிருப்பதால், தமிழ் மறை, பொதுமறை, வள்ளுவர் வாய்மொழி, தெய்வநூல் எனப்பெயர் பெற்றுள்ளது.

"இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்
செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின்
வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினரின்குறள்வெண் பா."   (திருவள்ளுவமாலை)

இயல்வரையறைச் சிறப்பு :

பொருள்கட்கும் பண்புகட்கும் வினைகட்கும் இயல்வரையறை (Definition) கூறுவதில் திருக்குறள் தலைசிறந்ததாகும்.