எ - டு :

"அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்."

"வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்."

"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு."

நவில்தொறும் நயமுடைமை :

இதுவரை பகுதிக்கும் முழுமைக்கும் சுருக்கமாகவும் பெருக்க மாகவும் திருக்குறட்குத் தோன்றியுள்ள உரைகள் ஏறத்தாழ நூறும், அது மொழிபெயர்க்கப் பெற்ற மொழிகள் இருபதும், ஆகும். ஆயினும், இன்னும் அச்சுரங்கத்தினின்று கருத்துமணிகள் தோண்டத் தோண்ட மேன்மேலும் வந்து கொண்டேயிருக்கின்றன.

எ - டு :

"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு."

நாடு என்ப - சிறந்த நாடென்று சொல்லப்படுவன; நாடா வளத்தன - பிறநாடுகளின் உதவியை வேண்டாது தமக்கு வேண்டிய பொருள் வளங்களையெல்லாம் தம்மகத்தே கொண்டனவாகும்; நாடவளந்தரு நாடு - பிற நாட்டுதவியை நாடுமாறு குன்றிய வளங் கொண்ட நாடுகள்; நாடு அல்ல - சிறந்த நாடாகா.

"மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத் 
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொரு மூறு மறிவு." -   (திருவள்ளுவமாலை)

நடுவு நிலைமை :

எல்லாரும் வாழவேண்டுமன்பதும், குற்றத்திற்கேற்ப எல்லாரையும் ஒப்பத் தண்டிக்க வேண்டுமென்பதும், திருக்குறளின் நடுநிலைக் கொள்கைகளாம். இவை ஆரியக் கொள்கைகட்கு நேர்மாறானவை.

"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி யொரு குலத்திற் கொருநீதி."

என்று மனோன்மணீய ஆசிரியர் கூறுதல் காண்க.