உயர்நிலையறம் :

எல்லா அறநூல்களுள்ளும் உயர்ந்த ஒழுக்க வரம்புகளைக் கூறுவது திருக்குறளே.

எ - டு :

"பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்."

"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."

"உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்."

"ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை."

"இறந்த மூப்பினராய இருமுது குரவரும் கற்புடை மனைவியுங் குழவியும் பசியான் வருந்து மெல்லைக்கண், தீயனபலவுஞ் செய்தா யினும் புறந்தருக." என்பது ஆரிய அறநூல் நெறியீடு.

நடைமுறையறிவு :

திருவள்ளுவர் மக்கட்கு உயர்ந்த ஒழுக்கத்தை வகுத்தாரேனும், உலகியலறிந்து அதன் ஒழுங்கான நடப்பிற்குத் தோதாகவே சில விலக்குகளையும் அமைத்திருக்கின்றார்.

அருளுடைமை, புலான்மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை என்னும் அறவினைகளை அரசியலில் முற்றக் கடைப்பிடிப்பது அரிதாதலின், அவற்றை இல்லறவியலிற் கூறாது துறவறவியலிலேயே கூறியுள்ளார்.

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்" என்று சொன்ன வள்ளுவரே, "புலத்தலிற் புத்தேணாடுண்டோ" என்றும் "ஊடுதல் காமத்திற் கின்பம்" என்றும் உடன்பட்டுள்ளார்.

உண்மைக்கூற்று :

இறைவனே நால்வகை வருணத்தாரையும், முறையே தன்முகத்தினின்றும் மார்பினின்றும் தொடையினின்றும், பாதத்தினின்றும் படைத்தானென்றும், அவருட் பிராமணனே உயர்ந்தவனென்றும், மற்ற மூவரும் அவனுக்குத் தாழ்ந்தவரென்றும் அவனுக்குத் தொண்டு செய்யவே படைக்கப்பட்டவரென்றும், ஆரிய நூல்கள் துணிந்து பொய்யுரைப்பது போல, திருக்குறள் ஓரிடத்தும் கட்புலனான