உண்மைகளைத் திரித்துக் கூறுவதில்லை. எங்கேனும் ஓரிடத்தில் உயர்வு நவிற்சி அளவிறந்திருப்பினும், அது அணிதழுவியதும் உண்மை எல்லாராலும் அறியப்படத்தக்கதுமாகவே யிருக்கும்.

எ-டு;

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்."

"பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே" -  (திருவள்ளுவமாலை)

அதிகாரவொழுங்கு :

நூன் முழுதும் 133 அதிகாரங்களாக வகுக்கப்பட்டிருப்பதும், ஒவ்வொன்றும் பப்பத்துக் குறள் கொண்டிருப்பதும், ஒவ்வோரியலிலும் அதிகாரங்கள் ஒன்றோடொன்று கோவையாகத் தொடர்பு கொண்டிருப்பதும், பிறநூல்களிற் காணற்கரிய ஒழுங்காகும்.

சொற்பொருள் தூய்மை :

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே. ஆரிய வெறியர் கூறுவது போல் ஐம்பதல்ல.

அப்பதினாறனுள்ளும், அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே.

அல் - அ, மடி - மரி - மரர்.

கரணம் - காரணம் (வ.) கரு + அணம் = கரணம் = செய்கை, செய்கைக் கருவி. கருத்தல் செய்தல். இது ஒரு வழக்கற்றவினை.

பகு - பக்கு - பாக்கு = பகுதி. பாக்கு - பாக்கியம் = நற்பகுதி, நற்பால், நற்பேறு.

விழித்தல் = கண்திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு. விழி - விடி - விதி - வித் (வ.) - வித்தக. கவரி என்பது சமரி என்னும் வடநாட்டு சொல்லின் திரிபு.