அதி என்பது அதை என்னும் சொல்லிற்கினமான வழக்கற்ற தமிழ் வினைச்சொல். ஆயம் என்னுஞ் சொல்லின் முதனிலையான ஆ என்பது வா என்பதன் திரிபு.
குணம், நிச்சம் என்னும் இரண்டும். தென்சொல்லே, கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல், கொள்- கொள்கை = இயல்பு. கொள் - கோள் = தன்மை. கொள் - கொண் - (கொணம்) - குணம் = கொண்டதன்மை, தன்மை.
இச்சொற்கு வடவர் காட்டும் மூலம் க்ரஹ் (பற்று) என்பதே.
நில் - நிற்றல் = நிலைப்பு.
"குணபத்திரன்றாள் நிற்றலும் வணங்கி" (சூடா ; 7:76)
நிற்றல் - நிச்சல். ஒ. நோ: முறம் - முற்றில் - முச்சில்.
"நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய" (திவ். திருவாய், (1:6:11)
நிச்சல் - நித்தல். "நித்தல் விழாவணி" (சிலப்.உரைபெறு கட்டுரை). நில் - நிற்றம். ஒ.நோ: வெல் - வெற்றம்.
நிற்றம் - நிச்சம் - நித்தம் - நித்ய (வ.)
இன்னும் இவற்றின் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் கண்டுகொள்க.
திருக்குறளிற் சொல்லப்பட்டுள்ள பொருள்களெல்லாம் தூய தமிழ்ச் செய்திகளே. ஆரியத்தைக் கண்டித்தற்கென்றே நூலியற்றியவர் எங்ஙனம் ஆரியச் செய்திகளைத் தழுவ முடியும்? இயன்றவிட மெல்லாம் வலிந்தும் நலிந்தும் ஆரிய மூலங்காட்டும் பரிமேலழகரும்,
"இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்"
என்னுங் குறட் சிறப்புரையில், "இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்கவென்னும் வடநூன் முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது நிலையுடைமையையுந் தூக்கி அவை செய்யற்க வென்பதாம்." என்று வரைந்திருத்தல் காண்க.
செய்யுட்சிறப்பு:
திருக்குறள்போற் குறள்வெண்பாவிற்குச் சிறந்தநூல் முன்னுமில்லை; பின்னுமில்லை. ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு வகையில் ஒளிவிடும் மணிபோல்வதாம்.
எ-டு:
"தெய்வந் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை."
|