"மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது."

"பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நூலினிது விளங்கும்."

பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைப்படும். இலக்கண நூற்கு இவ்விரண்டும் வேண்டும்; இலக்கிய நூற்குச் சிறப்பொன்றே போதும். அச்சிறப்பும், பிறர் ஆசிரியனையும் நூலையும் சிறப்பித்துக் கூறுவதும் ஆசிரியன் நூற்பொருளைச் சுருக்கிக் கூறுவதும் என இரு வகையாம். ஆசிரியன் கூறுவது தற்சிறப்புப்பாயிரம் எனப்படும். அது கடவுள் வழுத்தொடு கூடியும் கூடாதும் இருக்கும்.

மக்களெல்லாரும் இம்மையிலும் மறுமையிலும் இன்புற்று வாழ வேண்டுமென்பதே, திருவள்ளுவர் திருக்குறளியற்றியதன் நோக்கம். இல்லறத்தில் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றவாறு எங்ஙனம் ஒழுக வேண்டுமென்பது இல்லறவியலிலும், இறந்தபின் வீடு பெறுவதற்கு எவ்வெவ்வறங்களையும் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்பது துறவறவியலிலும், எல்லாரும் தத்தம் தொழிலைச் செய்து பொருளீட்டி வாழ்வதற்கு அரசன் எங்ஙனம் பாதுகாப்பளிக்க வேண்டுமென்பது பொருட்பாலிலும், கணவனும் மனைவியும் காமவின்பத்தை எங்ஙனம் நுகரவேண்டுமென்பது இன்பத்துப் பாலிலும், கூறப்பட்டுள்ளன.

இங்ஙனம் மக்களெல்லாரும் இடையூறின்றி இனிது வாழ்தற்கு, முதற்படியாக வேண்டிய ஏதுக்கள் நான்கெனத் திருவள்ளுவர் கண்டார். அவை கடவுள்வழிபாடு, மழைபெயல், துறவியர்உறைவு, அறவொழுக்கம் என்பன. இவற்றையே ஆதிபகவன் வழுத்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் பாயிர வதிகாரங்கள் நான்கும் எடுத்தோதுகின்றன. ஆதலால், திருக்குறட்குப் பாயிரந் தேவையில்லை யென்பதும், அது இடைச் செருகலென்பதும், ஆராய்ச்சியில்லார் கூற்றேயென அறிக.

பாயிரம் என்னும் சொல், முதற்கண் போர்மறவர் போர்க்களத்திற் பகைவரை விளித்துக்கூறும் நெடுமொழியென்னும் மறவியல் முகவுரையைக் குறித்துப் பின்பு நூன் முகவுரையைக் குறித்தது.

பயிர்தல் = (க) ஊரி விலங்கு பறவைகள் ஒன்றையொன்று அழைத்தல்.

"செங்காற் பல்லி தன்றுணை பயிரும்" (குறுந். 16).

"கடுவன் ... மந்தியைக் கையிடூஉப் பயிரும்" (புறம். 158)