புர: புரத்தல்=காத்தல். புர - புரம்=காப்பு. புர-புரவு=காப்பு. புரவலன்=காவலன். புரந்தா-புறந்தா, புறந்தருதல்=பாதுகாப்பளித்தல், காத்தல். புரந்தா-புரந்தான்=காவலன், அரசன். புரந்தரன்-புரந்தர (வ.) = இந்திரன், விண்ணோர், காவலன்.

புரி: புரிதல் = விரும்புதல் . புரி - ப்ரீ (வ.)

புரை: புரை=துளை , அறை , வீடு , கோயில் . துணைக்கருத் தினின்று குற்றமென்னுங் கருத்துந் தோன்றும் . புரை - புர ( வ.)

பூசனை: 18 ஆம் குறளுரையைப் பார்க்க.

பூதம்: பூத்தல் = தோன்றுதல்.

"அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று ." (நீதிநெறி. 5)

இப்பாவிலுள்ள பூத்தற் சொல் வேறு ; மலர்தலைக் குறிக்கும் பூத்தற் சொல் வேறு . மலர்தலைக் குறிப்பது பொலிவை யுணர்த்தும் பொல் என்னும் அடியினின்று திரிந்ததாகும்.

புகு -(பொகு) - போகில் = அரும்பு .

புகு - பூ - போ - போத்து = வளார் , இளங்கிளை . போத்துவெடித்தல் என்னும் வழக்கை நோக்குக . 

பூ: பூதம் = பெருவெளியில் தோன்றிய நால்வகை அல்லது ஐவகைப் பொருள்களுள் ஒன்று .

" வளியென வரூஉம் பூதக் கிளவியும் " (தொல். 242)

" பால்வரை தெய்வம் வினையே பூதம் 
 பால்பிரிந் திசையா வுயர்திணை மேன. "(தொல். 541)

பூ: பூ , (வ. bhu) , இச்சொல்லினின்றே புவந , பூமி , பவிஷ்ய , பாவந . முதலிய முன்னொட்டுப் பெறாச் சொற்களும் , அநுபவ , அநுபூதி , உத்பவ , ஸ்வயம்பூ முதலிய முன்னொட்டுப் பெற்ற சொற்களுமாக நூற்றுக்கணக்கான வடசொற்கள் தோன்றுமென அறிக .