(பொ--ரை.) மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது; இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தையளந்தது.

கோதமனார்

15.ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா--ரேட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.

(பொ--ரை.) பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை.

பிராமணர் ஆரிய வேதங்களை ஏட்டிலெழுதாதிருந்தமைக்குக் கரணியங்கள்--

1. ஏட்டிலெழுதினால் அவற்றின் வெள்ளைக் கோட்டியும் பிள்ளைக் கருத்தும் வெளியாகிவிடுமென்னும் அச்சம்.

2. ஏட்டிலெழுதினால் எல்லாருங் கற்றுப் பூசாரித்தொழிலை மேற்கொண்டு பிராமணர்க்குப் பிழைப்பில்லாது செய்து விடுவாரென்னும் அச்சம்.

3. ஏட்டிலெழுதாதிருந்தால் மேன்மேலுங் காலத்திற்கேற்ற திருந்திய கருத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்புண்மை.

நத்தத்தனார்

16.ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்--போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

(பொ--ரை.) ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.

முகையலூர்ச் சிறுகருத்தும்பியார்

17.உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத் 
தெள்ளுத லன்றே செயற்பால--வள்ளுவனார்