மருத்துவன் தாமோதரனார்

11.சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்
மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி 
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.

(பொ-ரை) மலையப் பகையென்று குத்தும் யானைபோலும் அரசே! சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங் கலந்து மோந்தால், யாருக்குந் தலைவலி நீங்கிவிடும். திருவள்ளுவர் திருக்குறளைப் பார்த்தபின் சீத்தலைச்சாத்தனாருக்குப் பிறர் பாடல்களால் ஏற்பட்ட தலைவலி நீங்கிற்று.

நாகன் தேவனார்.

12.தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை 
வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதா
மப்பா லொருபாவை யாப்பவோ வள்ளுவனார்
முப்பால் மொழிமூழ்கு வார்.

(பொ-ரை) தாமரைக்குளத்திற் குளிப்பார் பிறகுளத்தை விரும்பார்.அதுபோல் திருவள்ளுவரின் திருக்குறளைக் கற்றார் பிற நூல்களை விரும்பார்.

அரசில் கிழார்.

13.பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்.

(பொ--ரை.) விரிவுபட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களையெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?

பொன்முடியார்

14.கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின் றளந்த குறளென்ப--நுன்முறையான்
வானின்று மண்ணின் றளந்ததே வள்ளுவனார்
தாநின் றளந்த குறள்.