(பொ-ரை) தாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்யவல்லதாம்
?
மாமூலனார்.
8.அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்.
(பொ-ரை) அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை , மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.
கல்லாடர்
9.ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பான் மொழிந்த மொழி.
(பொ-ரை) அறுவகை மதத்தாரும் ஒருபொருளின் இயல்பை இன்னதென்று ஒருமதத்தார் கூறின், அதைமறுத்து வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும் , ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்னவற்றையோ உண்மையென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.
சீத்தலைச்சாத்தனார்.
10.மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.
(பொ-ரை) திருவள்ளுவரின் முப்பால் , மலை , நாடு ஆறு நகர் , முரசு, கொடி , குதிரை, தமிழ் ஆகியவற்றை மும்மூன்றாகக் கொண்ட மூவேந்தரின் முடிமாலை போல்வதாம்.
|