(பொ-ரை.) திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந்தன்மையதான விண்ணக மலர்போலும்.
உக்கிரப்பெரு வழுதியார்.
4.நான்மறையின் மெய்ப்பொருளை முகப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி.
(பொ-ரை) நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக; வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.
கபிலர்.
5.தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.
(பொ-ரை) வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.
பரணர்
6.மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுது நயந்தளந்தான் -வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
ருள்ளுவ்வெல் லாமளந்தா ரோர்ந்து.
(பொ-ரை ) திருமால் குறளாய்த் தோன்றித்தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர்
கருத்தனைத்தையும் அளந்தார்.
நக்கீரர்
7.தானேமுழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
லான வறமுதலா வந்நான்கு - மேனோருக்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று.
|