தமிழ்மொழியாந் தாய்மொழி பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோற்றமுற் றிலங்கும் உயர்தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறீஇ வளர்த்துக் காத்த பெருமை பழம்பதியாகிய பாண்டிநாட் டரசராம் பாண்டியர்க்கே யுரியது. இங்ஙனம் பாண்டியர் நிறீஇய சங்கம், முதல் இடை கடை என மூன்றாகும். இவற்றில் மதுரையிலிருந்த கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தவர் சிறு மேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலானவர். அவருள்ளிட்டுப் பலர் பாடினர். அவர்கள் பாடியன கூத்தும், வரியும், பேரிசையும், சிற்றிசையும், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், பதினெண் கீழ்க்கணக்கும் என்றித் தொடக்கத்தன. இவற்றுள், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், மேற்கணக்கைச் சார்ந்தவை.
"அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி
அறம்பொருள் இன்பம் அடக்கி அவ்வத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்"
என்ற பன்னிரு பாட்டியற் சூத்திர மேற்கோளுக்கிணங்கக் குறைந்த அடிகளுடைய செய்யுட்களால், அறம் பொருள் இன்பம் என்பவற்றைத் தழுவியமைத்த நூல் கீழ்க்கணக்காகும். கணக்கு - நூல். கீழ்க்கணக்கு சிறுபான்மை ஐம்பதிற் குறைந்தும், ஐந்நூற்றின் மிக்கும் வரும். இனியது, இன்னா, கார், களவழி நான்கும் ஐம்பதிற் குறைந்து வந்தன. முப்பாலாகியதிருக்குறள் ஐந்நூற்றின்மிக்கு வந்தது. இக் கீழ்க்கணக்கு நூல்களையே தாயபனுவல் என்னும் பெயராற் கூறுவர் எனவும், இவை அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணஞ் சொல்லுவ எனவும், வேறிடையிடை அவையன்றித் தாஅய்ச் செல்வது முண்டெனவும், இச் செய்யுட்கள் அடி நிமிராது இரண்டடி முதல் ஆறடியிறுதியாக
|