கையார் பாடிய 45 வெண்பாக்களடங்கிய நூலை மேற்குறித்த கைந்நிலைக்குப் பதிலாகக் கூறுவர். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு இவை என்று இன்னும் வரையறுக்கப்படாமை வியப்பே.
"கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம், காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி"
என்ற திரிகடுக வழிபடுகடவுள் வணக்கச் செய்யுளான், இந் நூலாசிரியராகிய நல்லாதனார் வைணவர் என்பது பெறப்படும். "அருந்ததிக் கற்பினார் தோளும் ....... நட்பும் இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து" எனக் கூறப்பட்டதிலுள்ள திரிகடுகம் என்னுஞ் சொல்லே சிறப்புப்பற்றி இந் நூலுக்குச் சிறப்புப் பெயராகக் கொள்ளப்பட்டது : உவமை யாகுபெயர்.
திரிகடுகம் : சுக்கு திப்பிலி மிளகு என்பது, பிங்கல நிகண்டு சூத்திரம் 352ஆல் விளங்கும். சுக்கு முதலிய மூன்றினாகிய கடுகம் ஒருவர் உடல்நோயை மாற்றி இன்பம் புரிவதுபோல் ஒவ்வொரு பாட்டின் அமைந்த மும்மூன்று பொருளும் உளநோயாகிய அறியாமை முதலியவற்றைப் போக்கி இன்பஞ் செய்வன என்க. இந் நூல் காப்புச் செய்யுளுட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. கடைச்சங்ககாலத் தொகை நூல்களி லொன்றாகக் கருதப்படுதற்கிணங்க, இந் நூல் இன்றைக்கு 1800 ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்டதென்பது பெறப்படும்.
இந் நூற்குச் சில பல வுரைகள் நாளிதுவரை வெளிவந்துள்ளன. சில பொழிப்புரையுடனும், சில பொழிப்புரை கருத்துரையுடனும், சில பதவுரை முதலிய சில குறிப்புகளுடனும் விளங்குகின்றன. இவற்றினுரைகளிற் கண்ட நயங்களைக் கொண்டும், காணாது நிற்கும் உரைக்குறிப்பு, இலக்கணக் குறிப்பு இவற்றைச் சேர்த்தும் விருத்தியுரை யொன்றை எழுதித் தரல்வேண்டுமென்பதாகத் திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர், திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவ் விருத்தியுரை எம்மால் எழுதப் பெறுவ
|