13. ஆசாரக்கோவை - பெருவாயின்முள்ளியார் இயற்றியது. இருடிகள் சொல்லிய ஆசாரங்களைக் கோத்துரைக்கும் பலவகை வெண்பாக்கள் (தற்சிறப்புப்பாயிர முட்பட) நூற்றொன்றுடையது.

14. பழமொழி - முன்றுறையரையனார் (ஜைனர்) இயற்றியது. ஒவ்வொரு பழமொழியை இறுதியில் பெற்ற நானூறு வெண்பாக்களையுடையது.

15. சிறுபஞ்சமூலம் - காரியாசான் (ஜைனர்) இயற்றியது. ஐவைந்து நீதிகளைக் கூறும் தொண்ணூற்றெட்டு வெண்பாக்களையுடையது.

16. இன்னிலை - பொய்கையார் பாடியது. மதுரையாசிரியர் பூதனார். தொகுத்தது. கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது. அறப்பால் பத்தும் பொருட்பால் ஒன்பதும் இன்பப்பால் பன்னிரண்டும் வீட்டிலக்கப்பால் பதினான்கும் ஆகிய நாற்பத்தைந்து வெண்பாக்களையுடையது. (கைந்நிலை என்பர் சிலர். ஐந்திணை யைந்து நூலில் இன்னும் காணக்கிடையாததொன்று என்பர் சிலர்.)

முதுமொழிக்காஞ்சி

பலர்புகழ் புலவர் பன்னின தெரியும்

உலகியல் பொருண்முடி புணரக்கூ றின்று.

(இ-ள்.) எல்லாரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம்பொரு ளின்பத்தை அறியச் சொல்லியது. (புறப்பொருள்வெண்பாமாலை - பொதுவியற் படலம் - காஞ்சிப்பொதுவியற்பால -1)
ஏதமி லறமுதல் இயல்பிவை யென்னும்
மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி.
 (இலக்கணவிளக்கம் - 619 - சூ)
கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய
முறைமையாகும் முதுமொழிக்காஞ்சி.
  (திவாகரம் - ஒலிபற்றிய பெயர்த்தொகுதி - 126)