இன்னா நாற்பது
முகவுரை
இன்னா நாற்பது
என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய கீழ்க்கணக்கு
நூல்களில் ஒன்று. இறையனார் களவியலுரையிற்கடைச்
சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க்
கணக்குகள் குறிக்கப்பட்டிலவேனும், பின்னுளோர் பலரும்
அவையும் சங்கத்தார் பாடிய வென்றே துணிந்து எட்டுத்
தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என
எண்ணி வருகின்றனர். கீழ்க்கணக்கியற்றிய ஆசிரியர்களுள்
கபிலர், கூடலூர் கிழார் முதலிய சிலர் சங்கத்துச் சான்றோ
ரென்பது ஒருதலை, கீழ்க்கணக்குப் பதினெட்டென்பது,
தொல்காப்பியச் செய்யுளியலில்,
"வனப்பிய றானே வகுக்குங்
காலைச்
சின்மென் மொழியாற் றாய பனுவலோ
டம்மை தானே யடிநிமிர் பின்றே"
என்னும் சூத்திர வுரையிற் பேராசிரியரும்,
நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றா னறியலாவது. அவை
அம்மையென்னும் வனப்புடையவாதலும் அவ்வுரையாற்
றெளியப்படும்; பழைய பனுவல்களை அளவு முதலியனபற்றி
மேற்கணக் கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுள்ளோர்
வகைப்படுத்தின ராவர்.
"அடிநிமிர் பில்லாச்
செய்யுட் டொகுதி
யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்"
என்பது பன்னிரு பாட்டியல்.
கீழ்க்கணக்குகள்
பதினெட்டாவன : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா
நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது,
ஐந்திணை யைம்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது,
திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம்,
ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி,
ஏலாதி, என்பன, இதனை,
"நாலடி
நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு"
|