‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு'

என்னும் வெண்பாவா னறிக. இதில் ‘நால்' என்பதனை ‘ஐந்திணை' என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணை யெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். வெண்பாவின் சொற்கிடக்கை முறை அதற்கேற்ற தன்றென்க. சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக்கொண்ட இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்தல் செய்வர். அவர், ‘திணைமாலை' என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகுமென்பர். ‘ஐந்தொகை' ‘இன்னிலைய' ‘மெய்ந்நிலைய' ‘கைந்நிலையோடாம்' ‘நன்னிலையவாம்' என் றிங்ஙனம் பாடவேற்றுமையும் காட்டுவார்.

இனி, களவழி நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய பொய்கையா ரென்பார். இவர் இது பாடியதன் காரணம் இந்நூலிறுதியில் இதன் பழைய உரையாளரால் எழுதப்பட்டிருக்கும் தொடரால் விளங்கும். அது, ‘சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும்பொறையும் (திருப்?) போர்ப் புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும் பொறையைப் பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று' என்பது.

இச் செய்தி, கலிங்கத்துப்பரணி இராச பாரம்பாரியத்தில்,

"களவழிக் கவிதை பொய்கையுரை செய்யவுதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"

என்றும், விக்கிரம சோழனுலாவில்,

‘மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திபனும்'

என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

சோழனொருவன் ஒரு சேரமன்னனை வென்ற வெற்றிச் சிறப்பைப் பாடியதே களவழி நாற்பது என்பதற்கு இதன் கண்ணேயே சான்றுகள் உள்ளன. செய்யுள் தோறும் சோழனது வென்றி கூறப்படுதல் வெளிப்படை. அவன் ‘செங்கண்மால்' ‘செங்கட்சினமால்' என்று பல பாடல்களிற் குறிக்கப்படுதலின் அவனது பெயரும்