வேறாகிச் சோழனாற் சிறைப்பட்டவனாயின் அவனை
விடுவித்தற்குக் களவழி நாற்பது பாடப்பட்டதென்று
கோடல் அமையும்.
இனி, சிலர்
நல்லிசைப் புலவராகிய பொய்கையாரையும்
திருமாலடியாருள் ஒருவராகிய பொய்கையாழ்வாரையும்
ஒருவராகக் கொண்டுரைத்துப் போந்தனர். அது
திரிபுணர்ச்சியின்பாற் பட்ட தென்பதும்,
சங்கத்துச் சான்றோரை ஆழ்வாராக்குதற்கு ஒரு
சிறிதும் இயைபின்றென்பதும் செந்தமிழ்ச்
செல்வி இரண்டாஞ் சிலம்பினுள் ‘பொய்கையார்'
என்னும் தலைப்பின்கீழ் யானெழுதிய கட்டுரையா னறிக.
கடைச்சங்கப்
புலவருள் ஒருவராகும் பொய்கையாராற் பாடப்பட்ட
இந்நூல், கி.பி. 250 ஆம் ஆண்டுக்குப்
பிற்பட்டதாகாதென்பது ஒருதலை. களவழி கொண்ட
சோழன் செங்கணானைக் கரிகாலனுக்கு முன்வைத்துக்
கூறுகின்றது பரணி. உலாவானது கரிகாலனை யடுத்துப்
பின்வைத்தோதுகிறது. இவற்றுள் எது உண்மையாயினும்
செங்கணான் கடைச்சங்க நாளில் விளங்கிய மன்னன்
என்பதில் இழுக்கொன்று மில்லை. அவன்
கழுமலங்கொண்டமை களவழியானும், வெண்ணியினும்,
அழுந்தையினும் ஏற்ற மன்னரை வெற்றிகொண்ட
செய்தி திருமங்கையாழ்வாரியற்றிய பெரிய
திருமொழியிலுள்ள திருநறையூர்ப் பதிகத்தாலும்
அறியப்படுகின்றன. இவ் வேந்தர் பெருமானே திருத்தொண்டர்
புராணத்திற் கூறப்பட்ட சிவனடியார்களில்
ஒருவராகிய கோச்செங்கட் சோழர் என்பர்.
திருவானைக்காவில் திருவெண்ணாவற் கீழ்
எழுந்தருளியுள்ள இறைவனை வழிப்பட்ட சிலந்தி
கோச்செங்கட் சோழராகப் பிறந்த
வரலாற்றினைப் பெரிய புராணம் இனிது
விளக்குகின்றது. திருநெறித் தமிழ் வேதமாகிய தேவாரம்
முதலியவற்றிலும் இவ்வுண்மை
விதந்தோதப்படுகின்றது. இவ்வரசர் பெருந்தகை
சிவனார் மேவுந் திருக்கோயில்கள் பற்பல சமைத்த
பரிசும் திருமுறைகளிற் பேசப்படுகின்றது.
திருமங்கையாழ்வாரும் ‘இருக்கிலங்கு திருமொழி
வாயெண்டோளீசற் கெழின்மாட மெழுபது செய்
துலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன்' என்று
இதனைப் பாராட்டுவாராயினர். இவ்வாற்றால் இம்
மன்னரது பெருமை அளப்பரிய தொன்றாதல் காண்க.
இனி, இந்
நூலாசிரியர் பொய்கை யென்னும் நாட்டிற்
பிறந்தமையால் இப் பெய ரெய்தினரென ஒரு சாராரும்,
பொய்கை யென்னும் ஊரிற் பிறந்தமையாலெனப்
பிறிதொரு சாராரும் கூறுப. இவ்வாசிரியர் ‘கானலந்தொண்டி
அஃதெம்மூர்' என்று புறத்திலே கூறியிருப்பதனால் மேற்
கடற்கரையிலுள்ள தொண்டி நகரம் இவரது பிறப்பிடம்
என்று உணரலாகும். அன்றித் தம்பாற் |