இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளது. அறனவாது ஆன்றோர்களால் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். மக்களின் புற உலக வாழ்க்கைக்கு வேண்டிய பல்வகைப்பட்ட பொருள்களையும் விளக்கிக் கூறும் பகுதி பொருட்பால் எனப்பட்டது. பல்வகைப் பொருளும் சிறப்புறுதற்கு அரசியலமைப்பே பெரிதும் ஏதுவாதலின் இஃது இப்பகுதிக்கண் விரித்து விளக்கப்படுகின்றது. பொருளாலடையும் காதலின்பம் காமத்துப்பாலில் விளக்கப்படுகின்றது. காதலின்பமாவது ஒத்த தலைவனுந் தலைவியுங் கூடியடையும் இன்பம்.

இந்நூலுக்கு உரைகள் பல இருப்பினும் அவை அயல் மொழி கலவாதும், பாக்களின் போக்குக் கொப்ப முரண்பாடின்றியும் இல்லாமையோடு சொற்களை உடைத்து வீணான கொண்டு கூட்டுக்களுடனும் உள்ளன. இத்தகைய குறைபாடுகளின்றிக் குறளுக்குப் பரிமேலழகரால் எழுதப்பட்ட உரையையொப்ப இந்நூலுக்கும் திட்ப நுட்பஞ் செறிந்த ஓருரை இன்றியமையாத தாயிற்று.

இத் தேவையை முற்றச் செய்வான் வேண்டிக் கழகப் புலவர் திரு. இளவழகனாரவர்களால் உரை எழுதப்பெற்று இப்போது இந்நூல் வெளியிடப் பெறுகின்றது. தமிழுலகம் இதனைப் போற்றிப் பயனெய்தும் என நம்புகின்றோம்.

--சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்