பதிப்புரை

தண்டமிழ் மக்கள் கண்ட நூல்களுள் சங்க மேறிச் சிறப்புப் பெற்றன பற்பல. அவற்றுள் மாண்டன போக இன்றளவும் நின்று புகழொளி வீசுவன சிற்சில. அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன. இவற்றுள், கீழ்க்கணக்கில், ஒருசில பிற்காலத்தன எனக் கருதப்படுமாயினும் பெரும்பாலன சங்க காலத்தனவே.

கீழ்க்கணக்காவன குறைந்த அடிகளுடையன வாய், வெண்பா யாப்பினவாய், அறம் பொருளின்பங்கள் நுவன்று, அம்மை முதலிய அழகுகளுடையவாய் வருவன. இவற்றில் பாக்கள் ஐம்பதின் மிக்கும் ஐந்நூற்றிற் குறைந்து வருமென்பர். களவழி முதலிய சில ஐம்பதிற் குறைந்தும், குறள் ஐந்நூற்றின் மிக்கும் வந்தன.

நானூறு பாக்கள் கொண்டவற்றை அகநானூறு புறநானூறு என வழங்கும் மரபுபற்றி, நாலடியாலான இந்நானூறு பாக்களை நாலடி நானூறு என வழங்கினர். அது சுருங்கி நாலடி என்றும், உயர்வு சிறப்பு விகுதிபெற்று நாலடியார் என்றும் வழங்கப்பெறும்.

இந்நூல் சொன்னயம் பொருணயஞ் சிறந்து விளங்குவது ; நீதி நூல்களுள் தலைசிறந்து உலகுக்கொல்லாம் பொது நூலாக விளங்குந் திருக்குறளுக்கு அடுத்தபடியிற் பெருமையுற்று விளங்குவது.