தொகுத்துச் சேர்த்துப், பால் இயல் பாகுபாட்டுள் தமக்குத் தோன்றிய முறையில் ஒருவாறு அடக்கினார் திருமணம் செல்வக்கேசவராய முதலியாரவர்கள். அம்முறைப் பாகுபாட்டுடனேயே பழமொழி நானூறு தற்காலத்து வழங்கிவருகிறது. இப்பழமொழி நானூற்று உரை நூலும் அப் பாகுபாட்டுடனேயே வெளிவருகின்றது.

பழமொழி நானூறு என்னும் தனிப்பெருஞ் சிறப்புடைய இவ்வுயர் நூல் இரண்டு வகையில் பயில்வார்க்கு இன்பந் தந்து நிற்கின்றது. முதலாவது, நூலகத்தே பயின்றுவரும் பழமொழிகளின் பொருட்சிறப்பும், நாட்டில் வழங்கிவரும் அப் பழமொழிகளால் உணரலான தமிழ் மக்களியல்பும் பிறவும் அறிதல்; இரண்டாவது, அப் பழமொழிகளைக் கொண்டு விளக்கப்பெறும் அரிய நூற்கருத்து. பழமொழியின் சிறப்பையும் அவற்றால் விளக்கப்பெறும் நூற்கருத்தின் மாட்சியையும் பின்வரும் எடுத்துக் காட்டுக்களில் காண்க;

"இடைநாயிற் கென்பிடுமாறு" என்பது பழமொழி. ஆடு திருடச்செல்லுங் கள்வர், கிடைக்காவலாக இருக்கும் நாய்க்கு எலும்புத்துண்டத்தை இட்டுவிட்டுத் தாங்கருதியபடி ஆட்டை எவ்வகை இடையூறுமில்லால் திருடிச்செல்லும் இயல்பை இப் பழமொழி உணர்த்தி நிற்கிறது. இங்ஙனமே தம் பகைவரை வெல்லக்கருதினார் ஒருவர் அப் பகைவரோடுடனுறையும் நண்பர்களைத் தம் பக்கமாக ஆக்கிக்கொண்டு, அப் பகைவர்களை எளிதில் வெல்லவேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர்.

"அம்பலம் தாழ்க்கூட்டுவார்" என்பது பழமொழி. ஊர்ப் பொதுவிடமான அம்பலத்தின் வாயிற்கதவுக்குத் தாழிடுவார் என்பது இதன் பொருள். அம்பலத்தில் எக்காலும் பலரும் வரைவின்றி உள்நுழைந்தும் வெளிச்சென்றும் போக்குவரவு செய்தலால், அதன் வாயிற்கதவைத் தாழ்இடல் இயலாதென்பதாம். அக்காலத்து ஊர் அம்பலங்கள் இருந்தமையை இப்பழமொழி உணர்த்துகின்றது. இப் பழமொழியால் விளக்கப்படும் பொருள்