தம்மை நோக்கிக் குறைகூறும் மூடர் வாயை அடக்கப்புகுதல் அறிவிலார் செயலாம் என்பது.
"செய்கென்றான் உண்கென்னுமாறு" என்பது பழமொழி. ஒரு செயலைச் செய்யென்று சொன்னவன் உணவை உண் என்று சொன்னவனாவான் என்பது இதன் பொருள். ஒருவன் ஏவிய செயலைச் செய்தால், அதன் பயன் பின்னே தவறாமல் கிடைக்கும் என்பதாம். அரசன் ஏவிய செயல்களைக் கைம்மேல் என்ன பெற்றோம் என்று கருதாமல் செய்க என்னும் சிறந்த கருத்துக்கு அரணாக இப் பழமொழி வந்தது.
இனி, இந்நூலில் வந்துள்ள பழமொழிகளெல்லாம் உலக வழக்கில் வழங்கினவாறே எடுத்தாளப்படாமல் செய்யுள்நடைக் கேற்பப் பலவாறு உருமாற்றியே வழங்கப்பட்டிருக்கின்றன என்பது மேற்காட்டிய பழமொழிகளாலும் இனிது விளங்கும்.
இனித் தற்காலத்து நாட்டில் வழங்குகின்ற பழமொழிகள் இந் நூலுள் வந்தனவற்றுள் சில கீழே காண்க.
ஆயிரங்காக்கைக் கோர்கல் |
(249) |
இருதலைக்கொள்ளி எறும்பு |
(141) |
இறைத்தோறும் ஊறும் கிணறு |
(378) |
உமிக்குற்றிக் கைவருந்துவார் |
(348) |
ஓடுக ஊரோடு மாறு |
(195) |
குன்றின்மேல் இட்ட விளக்கு |
(80) |
தனிமரம் காடாதல் இல் |
(286) |
திங்களை நாய் குரைத்தற்று |
(107) |
தொளை எண்ணார் அப்பம் தின்பார் |
(165) |
நாய்காணின் கற்காணாவாறு |
(361) |
நாய் வால் திருந்துதல் இல் |
(316) |
நிறைகுடம் நீர் தளும்பல் இல் |
(9) |
நுணலுந் தன் வாயற் கெடும் |
(114) |
பசிபெரி தாயினும் புல்மேயா தாகும் புலி |
(70) |
பாம்பறியும் பாம்பின கால் |
(7) |
பூவோடு நார் இயைக்குமாறு |
(88) |
|