இனிப், பண்டைக்காலப் பழமொழிகள், இக்காலத்து வழங்காதன, சிறந்த பொருட்சிறப்புடன் இருப்பன சில காண்க.

அயிரை இட்டு வரால் வாங்குபவர் (372)
ஏற்றுக்கன்று ஏறாய் விடும் (81)
ஓர்த்தது இசைக்கும் பறை (37)
கானகத் துக்க நிலா (139)
சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு (86)
சுரை ஆழ அம்மி மிதப்ப (122)
தமக்கு மருத்துவர் தாம் (149)
தம்மை யுடைமை தலை (387)
தீநாள் திருவுடையார்க்கில் (235)
நனிவெந்நீர் இல்லம் சுடுகலா வாறு (51)
நாய்மேல் தவிசிடு மாறு (105)
நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி (236)
பயின்றது வானக மாகிவிடும் (398)
பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ (159)
புலித்தலையை நாய் மோத்தல் இல் (204)
யானைபோய் வால் போகா ஆறு (395)

இனித், தற்காலத்து வழங்கும் பழமொழிகளன்றி அவற்றோடொத்த சில பழமொழிகளும் இந் நூலுட் காணப்படுகின்றன.

தற்காலத்து வழங்கும் பழமொழிகள் : -

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவான்
இரும்பு பிடித்தவன் கையும் துரும்பு பிடித்தவன் கையும் சும்மா யிரா
காசுகொடுத்துத் தேள் கொட்டிக்கொள்வது போல
ஏறவிட்டு ஏணியை வாங்குதல்
1மயில் போலும் கள்ளி (கரவுடையவள்)
நாளைக்கு வரும் பலாப்பழத்தைவிட இன்றைக் கிருக்கும் களாப்பழமே மேல்


1. மயில் பாம்பை உண்டு அடக்கமுடையதாக இருக்கும் என்க.