உடனுறைதல் இன்னாமைக்கே காரணமாகும் என்பது பொருளாம். ஆதலால், எவ்வகை மேம்பட்டோராயினும் உடனுறைதலால் கைப்பும் நீங்கிவாழ்தலால் இன்பமும் தோன்றல் உலகியற்கையாம் என்பதை உணர்த்துகின்றது. பழமொழியும் வெண்பாக் கருத்தும் ஒற்றுமையுற்று நிற்றல் காண்க.
இனி, நண்பராய் ஒழுகுவோர்மாட்டுக் கட்டாயம் இருக்கவேண்டிய சிறந்த ஒரு குணத்தை, ஒரு வெண்பா சிறக்க எடுத்துக் காட்டுகின்றது.
தந்தீமை இல்லாதார் நட்டவர் தீமையையும்
எந்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!!
ஒருவர் பொறைஇருவர் நட்பு.
"ஒருவர் பொறை இருவர் நட்பு" என்பது ஈண்டு வந்துள்ள பழமொழி. நண்பராய் ஒழுகுவோர் இருவருள் ஒருவர்மாட்டாயினும் பிழைபொறுக்கும் குணம் இருந்தாலன்றி அவர் நட்பு நெடிது நில்லாது என்பது இதன் பொருள். சிறந்த உலகியல் அறிவாம் இத் தன்மையை உலகில் காண்கிறோமன்றே? தனக்கு உரிய நண்பினன் செய்த பிழையாதலின், அப்பிழையைத் தன் பிழையாகவே கருதி அமைக எனக் கூறிய திறத்தைக் காண்க.
இனி, ஒருவர் ஒவ்வொருகால் பொருள்முட்டுப்பாட்டால் இடர் உறுவராயினும், அக் குறையைப் புறத்தார்க்குக் காட்டாமல், பிறர் மதிக்குமாறு தம் புறத்தோற்றத்தைப் பொலியக் காட்டி ஒழுகுக என அறிவுறுக்கின்றது ஒரு வெண்பா :
அகத்தால் அறிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்.
"உடுத்தாரை உண்டி வினவுவார் இல்" என்பது பழமொழி. சிறக்க உடுத்துப் பொலிவாரைக் காண்போர்
|