அவர்மாட்டுப் பெருமதிப்புக் கொள்வரே யன்றி, அவரைப் பசியும் வறுமையும், உடையராகக் கருதி உணவிட நினைக்க மாட்டார்கள். இஃது உலக இயல்பாம் : இப்பழமொழிக்கு ஒத்த பொருளையே இதன் முதல் இரண்டடிகளிலும் வைத்தார். இவ்வெண்பாக்களால் ஆசிரியர் பழமொழிகளையே முதலில் மனத்துக்கொண்டு, அவற்றோ டியையத்தக்க சிறந்த கருத்துக்களையே வெண்பாக்களில் வைத்து நூலியற்றிய திறம் தெரிகிறதன்றே!!

இனிப் பண்டை வரலாற்று நிகழ்ச்சிகள் பல இந்நூலகத்தே சிற்சில இடங்களில் குறிக்கப்படுகின்றன. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், மனுநீதி கண்ட சோழன், பொற்கைப் பாண்டியன், பாரி, பேகன், பாரிமகள், கரிகால்சோழன், சேரன் செங்குட்டுவன் என்போரைப்பற்றிய செய்திகள் சில குறிக்கப்படுகின்றன.

தூங்கும் எயிலும் தொலைத்தலால் (155)
கறவைக்கன் (று)ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (242)
தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் (76)
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (74)
பாரி மடமகள் பாண்மகற்கு ... நல்கினாள் (381)
நரை முடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் (6)
சுடப்பட்(டு) உயிர்உய்ந்த சோழன் மகனும் (239)
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (380)

என வருமிடங்களில் காண்க. மேலும் இராமாயணபாரதக் கதைக் குறிப்புக்களும் சில செய்யுட்களில் குறிக்கப்படுகின்றன.

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து (257)
அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (234)
பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா (356)

என வருமிடங்களில் காண்க. மாவலி (183) வாமனன் (177) மதுகைடவர் (301) என்போரைப்பற்றிய புராணக் குறிப்புக்களும் இந் நூலகத்தே குறிக்கப்படுகின்றன.