இனி, அக்காலச் சமண் சமயத்தவர்கள், பழமொழிகளைப் பெரிதும் போற்றிக் கையாண்டார்கள் எனக் கருதற்குச் சில செய்திகள் இடந் தருவனவாகக் காணப்படுகின்றன. இப்பழமொழி நானூறு சமண்சமயப் பெரும்புலவோரான முன்றுறையரையனாரால் இயற்றப்பட்டதென்பது வெளிப்படை. நீதிநூல்களுள் திருக்குறளுக்கு அடுத்தபடியாக எண்ணப்படும் நாலடிநானூறு பல சமண்சமயப் பெரும்புலவோரால் இயற்றப்பட்டதென்பதே பல்லோரின் துணிபாயிருக்கின்றது. மற்றை நூல்களைவிட அந் நாலடி நானூறு, பழமொழிகளைப் போற்றிக் கையாண்டிருக்கும் தன்மை ஈண்டு நினைத்தற்குரியதாகின்றது, நாலடி நானூற்றில்,

ஒருவர் பொறை இருவர் நட்பு,
கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு,
தட்டாமற் செல்லா(து) உளி,
கருநரைமேற்சூடேபோற் றோன்றும்

என இங்ஙனம் பல பழமொழிகள் வந்துள்ளன. இவை இந் நூலுள்ளும் காணப்படுவனவே.

இனிச், சமண்சமயத்தைச் சார்ந்து மீண்ட நாவுக்கரசர் திருவாரூர்ப் பதிகம் ஒன்றுள், ஒவ்வொரு செய்யுளின் ஈற்றிலும் ஒவ்வொரு பழமொழி அமையப் பாடியிருப்பதை நோக்கவும் சமண்சமயத்தவர் பழமொழிகளைப் போற்றிக் கையாளு மியற்கையையே நினைக்கச் செய்கிறது.

கனிஇருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே,
முயல்விட்டுக் காக்கைப்பின் போன ஆறே,
அறம்இருக்க மறம்விலைக்குக் கொண்ட ஆறே

என இங்ஙனம் வருகின்றன பத்துப் பழமொழிகளும்.

பழமொழிகளை எடுத்தாளுதல் யாவர்க்கும் இயல்பாயினும், நாலடி நானூறோடு மற்ற நூல்களை வைத்து ஒப்பு நோக்க நாலடி நானூற்றில் பழமொழிகள் சிறப்பாக