எடுத்து ஆளப்பட்டிருப்பதும், இப்பழமொழி நானூற்றுப் பழமொழிகளோடு அவை தொடர்புற்று நிற்பதும் தெளிய உணரப்படும். இவ்விரு நூலும் ஏறக்குறைய ஒருகாலத் தனவே எனத் துணியவும் இடம் ஏற்படுகிறது.

இத்தகைய சிறந்த பழமொழி நானூறு என்னும் நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்று உண்டு. அட்டாவதானம் சுப்பராயச் செட்டியார் சில பாட்டுகட்குமட்டும் உரை எழுதி மூலத்தோடு அச்சிட்டு வெளிப்படுத்திய பதிப்பும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் முதல் இருநூறு பாட்டுகட்குமட்டும் உரை எழுதி இரண்டு பகுதிகளாக அச்சிட்ட பதிப்பும் உண்டு. செல்வக்கேசவராய முதலியார் பதிப்பு, பால் இயல் பாகுபாட்டுடன் பதவுரையும் பிறவும் சேர்த்து வெளியிடப்பட்டதாகும். யாம் வெளியிடும் இவ்வுரைநூல் சிறந்த பதவுரையுடனும், விளக்கவுரையுடனும், பழமொழிகளை எடுத்துக்காட்டி விளக்க முறுத்திக்கொண்டு செல்லலின், இவ்வகை உரை நூல் இச்சிறந்த பழமொழி நானூற்றுக்கு வேண்டப்படுவதாயிற்று. இவ்வுரையினை இயற்றியவர் புலவர் திரு, ம. இராசமாணிக்கம் பிள்ளை அவர்களாவர். இத்துணைச் சிறந்த பழமொழி நானூற்றை இவ்விளக்கவுரையுடன் தமிழ்நாடு ஏற்றுப் பெரும்பயன் அடையுமென்று நம்புகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.