என்றும் , குறித்துள்ளார். எனவே, இவர் கவிதை உணர்ச்சியில் சிறந்தவராய், செந்தமிழில் தேர்ச்சி பெற்றவராய் விளங்கினார் என்று உணரலாகும். 'நாள்கூட்டம் மூழ்த்தம்'(42)என்ற பாடலில் சோதிட நூல் கருத்தும், 'சிக்கர்,சிதடர்' (74) என்ற பாடலில் மருத்துவ நூல் கருத்தும் அமைந்துள்ளன. 'சத்தம், மெய்ஞ்ஞானம், தருக்கம், சமையமே, வித்தகர் கண்ட வீடு, உள்ளிட்டு அறிவான்தலையாய சிட்டன்' என்றும் (91), 'கணிதம், யாழ், சாந்து, எழுதல், இலை நறுக்கு, இவற்றை அறிவான் இடையாயசிட்டன்' என்றும் (92), கூறுகின்றார். இவை கொண்டு இந்நூலாசிரியர் சோதிடம், மருத்துவம் முதலிய பிறகலைகளையும் நன்கு உணர்ந்தவர் என்று கருதலாம். உதாரம்(10), இலிங்கி (40), சிட்டன் (91,92), சிந்தி (91), சுவர்க்கம்(34,64,97), ஞானம் (91), சத்தம் (91), தருக்கம் (91), சமயம்(91), சேவகன் (93,101) பண்டாரம் (38), முதலிய வடசொற்கள் இந் நூலில் பயின்றுள்ளன. வடமொழியிலுள்ள சாஸ்திரக்கருத்துகளும், வட சொல்லாட்சியும், இவர் வட மொழியிலும் சிறந்த புலமை வாய்ந்தவர் என்பதைப் புலப்படுத்தும்.

நான்கு வரிகளிலே ஐந்து பொருள்களை அமைத்துப்பாடும் திறம் நோக்கத்தக்கது. இந்நூற்செய்யுட்களில் அமைந்துள்ள ஐந்தைந்து பொருள்களும் திரிகடுகத்தில் போலத் தெளிவுபட விளக்கமாக அமையவில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைக்குறிப்பு பதினைந்து இடங்களிலே தான் உள்ளது (22,39,40,42,43,47,51,53,57,60,63,68,83,91,92). அதுவும், திரிகடுகத்தில் உள்ளது போல ஒரு முறையைப் பின்பற்றி அமையவும் இல்லை.

திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, முதலிய முந்து நூல்களில் பொதிந்துள்ள கருத்துகளில் பலவற்றை இந் நூலகத்துக் காணலாம். 'கல்லாதான்தான் காணும் நுட்பமும்' (3) என்னும் பாடல் திரிகடுகத்தின்போக்கையும், 'இடர் இன்னா நட்டார்கண்'(12) என்னும் பாடல் இன்னா நாற்பதின் அமைப்பையும் ஒத்துள்ளன.'சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்' (9), 'வான் குரீஇக்கூடு' (25), வார் சான்ற கூந்தல் வரப்புயர' (44), 'மயிர்வனப்பும்' (35), 'பூவாது காய்க்கும் மரம் உள' (20), 'பூத்தாலும்காயா மரம் உள' (21) என வரும் பாடல்களின் கருத்துகளில் சில முந்து நூல்களின் மரபை ஒட்டியவை. ஒரு சில, தனிப்பாடல்கள் சிலவற்றில் காணும் கருத்துகளோடும், பிற்கால நீதி நூல்களோடும் ஒத்துள்ளன. இவைகள் எல்லாம் ஆழ்ந்து சிந்தித்தற்கு உரியன.

இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்றிரண்டு பாடல்கள் உள்ளன. 85-ஆம் பாடல் தொடங்கி, 89-ஆம்பாடல் வரை உள்ள ஐந்து பாடல்கள் பிரதிகளில் காணப்பெறவில்லை. ஆனால், புறத்திரட்டில் சிறுபஞ்சமூல நூலைச்சார்ந்த மூன்று செய்யுட்கள் காணப்படுகின்றன. அவை விடுபட்ட இப் பகுதியைச் சார்ந்தனவாக இருக்கலாம்.அந்தப் பாடல்களை 85,86,87-ஆம் எண்களுக்கு உரிய பாடல்களாகச் சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு அமைத்துள்ளது. அங்ஙனம் உறுதி செய்வதற்கு உரிய தக்க ஆதாரங்கள் இன்மையால், இப் பதிப்பில் அவை நூல் இறுதியில், தனியாக அமைக்கப் பெற்றன.

பழைய உரையாசிரியரால் உரை வகுக்கப்பெற்ற 'ஒத்த ஒழுக்கம் ' எனத் தொடங்கும் பாயிரச்செய்யுளோடு, 'மல் இவர் தோள் மாக்காயன்' என்னும் ஒரு பாயிரச் செய்யுளும் ஏடுகளில் காண்கிறது. இந்த இரண்டும் நூல் இறுதியில் சிறப்புப் பாயிரம் என்னும் தலைப்பில் தரப்பெற்றுள்ளன.

இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. இந்த உரையின் உதவி இல்லையேல், இந்நூற் பாடல்களில் அமைந்த ஐந்து கருத்துகளையும் தெளிவுற அறிதல்அருமையே. இவ் உரை பண்டை மரபுகளை அறிந்து அமைத்தசிறந்த உரையாய் உள்ளது.