சிறுபஞ்சமூலம்

முகவுரை

சிறுபஞ்சமூலம் என்னும் தொடர் ஐந்துசிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணைவேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லிவேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம்.

சிறிய வழுதுணைவேர், சின்னெருஞ்சி மூலம்,
சிறுமலி, கண்டங்கத்தரிவேர், நறிய
பெருமலி, ஓர் ஐந்தும் பேசு பல் நோய் தீர்க்கும்
அரிய சிறுபஞ்சமூலம்

(495)

என்பது பதார்த்த குண சிந்தாமணி. பொருட்டொகைநிகண்டும்,

சிறுபஞ்சமூலம் கண்டங்கத்தரி,
சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி,
நெருஞ்சி இவற்றின் வேராகும்மே.

(867)

என்று உரைக்கின்றது. இது போன்றே வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை, இவற்றின் வேர்களைப்பெரும் பஞ்சமூலம் என்று மேற்குறித்த இருநூல்களும் தந்துள்ளன. இவைகள் எல்லாம் வேர்களிலிருந்து தயாரிக்கப்பெறும் மருந்து வகைகள். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல்நலம் பேணுமாறுபோல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. இவ் வொப்புமை கருதியே இந் நூல் சிறுபஞ்சமூலம் எனவழங்கப் பெறுவதாயிற்று.

இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். காரி என்பதுவே இவரது இ்யற்பெயர். ஆசான் என்பது மதுரை வேளாசான், முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என்ற புலவர் பெயர்களிற்போலத் தொழில் பற்றிவந்த பெயராகலாம். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இவர் சைன சமயத்தார் என்பது இந் நூலின் காப்புச்செய்யுளால் அறியலாகும். அன்றியும், நூலுள்ளும் சைனசமயப் பெண்பாலரது ஒழுக்கமாகிய குராக் குறுங்கானம்போதலையும் (90), 'கொன்றான் கொலையை உடன்பட்டான்'(68) என்ற பாடலில் பஞ்ச மகா விரதங்களுள் ஒன்றாகிய அஹிம்ஸையின் உட்பாகுபாடுகளையும் அவற்றின் மறுதலையால் குறித்துள்ளார். பாயிரச்செய்யுளிலிருந்து இவர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது தெரியவருகிறது. இந்த மாக்காயனார் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் எனப்படுவர். இந்த ஆசிரியரிடம் கல்விபயின்றோருள் மற்றொருவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களின் ஆசிரியராகிய கணிமேதாவியார். எனவே, கணிமேதாவியாரும் காரியாசானும் ஒருசாலை மாணாக்கராவர். இவரும் மாக்காயனாரின் ஊராகிய மதுரையைச் சார்ந்தவராதல் கூடும். இவர் பஞ்ச தந்திரக்கதையுள் வரும், மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத்தீர்த்த கங்கைக் கரையில் உள்ள பூனைக் கதையை, 'உறுதவமேல் கங்கைக் கரைப் பூசை போறல் கடை (100) என்று சுட்டியுள்ளார். இதனால் பஞ்ச தந்திரம் தமிழில்பெருக வழங்கிய காலத்தை ஒட்டி இந்நூலாசிரியர் வாழ்ந்தனர் என்று எண்ணவும் இடம் உண்டு.

கவிஞனுக்கு உரிய இயல்புகளை,

செந்தமிழ் தேற்றான் கவி செயலும்
நாவகம் மேய் நாடின் நகை (10)

என்றும்,

கேட்பவன் கேடில் பெரும் புலவன் பாட்டு அவன்
சிந்தையான் ஆகும் சிறத்தல் (31)