எங்கேனும் கிடைக்கும் சிறுபஞ்சமூலம் ஏட்டுச்சுவடியில் இவ்விரண்டு பாடல்களின் மூலமும் உரையும் காணப்படுமேல் அவற்றை அடுத்த பதிப்பில் வெளியிடக் காத்திருக்கின்றேம். அச்சிட்டு வெளியாயுள்ள செய்யுள் மூலங்களிற் கண்ட பாடபேதங்கள் சில புறத்திரட்டுப் போன்ற நூல்களிற் கண்ட செய்யுட் பாடத்துக்கேற்பத் திருத்தியமைக்கப்பெற்றுள்ளன. இப்பொழுது எழுதப்பெற்றுள்ள உரை பெரும்பாலும் செந்தமிழ் நடையில் விளக்கமான முறையில் அமைக்கப்பெற்றிருப்பதும் பொழிப்புரை, கருத்துரை, விளக்கவுரைகளும் ஏற்றவாறு அமைக்கப்பெற்றிருப்பதுங் கற்போர்க்கு இன்பத்தை யெளிதிலூட்டுமென் றெண்ணுகின்றேம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தக்க உரையெழுதப்பெறாமலிருக்கும் நூல்கட்கும் இது போல் விளக்கவுரை யெழுதித்தரக் கேட்டு, அங்ஙனமே எழுதியவற்றை யச்சிட்டுத் தமிழுலகிற் குதவி வருந் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு எமது உளமார்ந்த நன்றியை வணக்கத்துடன் தெரிவிக்கின்றனம்.

இந்நூல் அச்சிடப் படுங்காலத்து ஒப்பு நோக்கித் திருத்தம் பரிந்துதவிய திருச்சி அரசினர் மகமதிய உயர்தரப் பாடசாலைத் தமிழாசிரியர் திரு. அ. நடராச பிள்ளையவர்கட்கு எம் உளமார்ந்த நன்றி உரித்தாகும்.

இவ்விளக்கவுரை தமிழ்க்கலைப்பயிற்சி கருதும் அறிஞர்கட்கும், பள்ளி மாணவர்கட்கும் பெரிதும் பயன்படுமாதலின், தமிழகத்தார் இத்தகைய வெளியீடுகளை விருப்புடன் ஏற்றுப் போற்றுவார்களாக. இறைவன் திருவருள் முன்னிற்க.

‘’புலவரகம்’’  } இங்ஙனம்
பாளையங்கோட்டை,  பு.சி.புன்னைவனநாதன்,
25-9.1936.  தமிழாசிரியர்