ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை என்னும் தொடர்க்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை'என்றோ, இத்தொடருக்குப் பொருள் கூறலாம். இப்பெயர்நூலுள் பொதிந்துள்ள பொருள் பற்றி அமைந்தது. 'அச்சமேகீழ்களது ஆசாரம்' (குறள்,1075), 'ஆசாரம் என்பது கல்வி'(நான்மணி. 93) 'அறியாத் தேயத்து ஆசாரம் பழியார்'(முதுமொழி, 3:8) எனத் திருவள்ளுவர் முதலாயினாரும் ஒழுக்கம் என்ற பொருளில் ஆசாரம் என்பதை வழங்கியுள்ளனர். இந் நூலுள்ளும் 'ஆசார வித்து' (1), 'ஆசாரம் எப் பெற்றியானும்படும்' (96), 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என வரும்இடங்களில், இச் சொல் மேற்குறித்த பொருளில் வந்திருத்தல் காணலாம். அன்றியும், ஒழுக்கம் (2,21), நெறி (16,27),முறை (11), வழி (29,30) என்னும் சொற்களாலும் ஆசாரம் என்பதை இந் நூலாசிரியர் குறித்துள்ளார்.

'ஆசார வித்து' (1) என்று தொடங்கி,'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில்தாம் கூறப் புகுந்த ஆசாரங்களை ஒரு நெறிப்பட ஆசிரியர்கோவை செய்துள்ள சிறப்புக் கவனித்தற்கு உரியது. பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர, நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும்மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் பலவாம். வைகறைத்துயில் எழுதல் முதல், காலைக் கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப்படுகின்றன. மேற்கொள்ளத்தக்கன இவை, விலக்கத் தக்கன இவை, எனச் சில ஆசாரங்களைவிதித்தும், சிலவற்றை விலக்கியும் செல்லும் முறைகவனிக்கத் தக்கது.

இந்நூல் வடமொழி ஸ்மிருதிக்கருத்துகளைப் பின்பற்றி எழுந்தது என்பது,

ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்

எனவரும் சிறப்புப் பாயிரச் செய்யுட் பகுதியால் தெரியவருகிறது. இலக்கண விளக்க உரையில், அதன் ஆசிரியர்வழி நூல் வகையுள் ஒன்றாகிய மொழிபெயர்த்தலுக்கு இந்நூலை உதாரணமாகக் காட்டியுள்ளார்.

தி. செல்வக்கேசவராய முதலியார் தமது ஆசாரக்கோவைப் பதிப்பின் முகவுரையில், 'இந்நூலிற் கூறிய ஆசாரங்கள் பெரும்பான்மையாய் வட மொழியிலுள்ள சுக்ரஸ்மிருதியிலிருந்து தொகுத்தவை என வடநூற்புலவர் கூறுகின்றனர்' என்று குறித்துள்ளார். பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தாம் ஆங்கிலத்தில் எழுதியதமிழ் இலக்கிய வரலாற்றில், ஆபஸ்தம்ப கிருஹ்யசூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயனதர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகு ஹாரித ஸ்மிருதி ஆகியவைகள் எல்லாம் இந் நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளவை என்கிறார்.