இங்ஙனம் உள்ள பல ஸ்மிருதிகளைப் பின்பற்றி உரைத்த ஆசாரங்களில் சில இக்காலத்திற்கு ஒவ்வாதிருக்கலாம். சிலவற்றை இன்றைய சூழ்நிலையில் பின்பற்ற முடியாமலும் இருக்கலாம். ஆயினும், இவை எல்லாம் முன்னோர் கண்ட ஒழுக்கநெறிகளே. இந்நூலாசிரியர் ஒரு சில இடங்களில், 'யாவரும் கண்ட நெறி' (16) 'மிக்கவர்கண்ட நெறி' (27), 'நல் அறிவாளர் துணிவு' (17), 'பேர் அறிவாளர்துணிவு (19), 'நூல் முறையாளர் துணிவு' (61) என்று கூறுவதிலிருந்தும் முன்னோர் மொழி பொருளை இவர் போற்றி, உரைத்தல் புலனாம்.

இந் நூலின் ஆசிரியரையும், இவர் தம்தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு அறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப்பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார்பெயர் போலும்! கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் வாழ்ந்த முள்ளியார் என்றோ, கயத்தூரை அடுத்த பெருவாயிலில் வாழ்ந்த முள்ளியார் என்றோகொள்ளவும் இடமுண்டு. இவர் வாழ்ந்த ஊர் கயத்தூர். இவ் ஊரைத் 'திரு வாயில் ஆயதிறல் வண் கயத்தூர்'என்று பாயிரப் பாடல் சிறப்பிக்கின்றது. இது கொண்டுசெல்வமும், திறலும், வண்மையும் ஓங்கிய ஊர் இது என்பது விளங்கும். இவ் ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடிஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தார் என்பதும் போதரும்.

இந் நூலுள் சிறப்புப் பாயிரம் நீங்கலாக நூறு செய்யுட்கள் உள்ளன. வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசைவெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலைவெண்பா, என்பனவெல்லாம் இதில் உள்ளன. சிறப்புப்பாயிரப் பாடல் நூல் இறுதியிலேயே ஏடுகளில் காணப்பெறுவதால், இப்பதிப்பிலும் அது நூல் இறுதியில் தரப்பெற்றுள்ளது.

இந் நூற் பாடல்கள் பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, முதலிய இலக்கிய உரைகளிலும், நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், முதலிய இலக்கணநூல்களின் உரைகளிலும் மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ளன. இந் நூல் முழுமைக்கும் செவ்விதின் அமைந்த பழைய பொழிப்புரை உள்ளது.