தோன்றுகின்றது. 6 எண்ணுள்ள "மரையாவுகளும்" என்ற கவியும் 7 எண்ணுள்ள "கல்வரையேறி" என்ற கவியும், 59 எண்ணுள்ள "தாழைகுருகீனும் என்ற கவியும் தொல்காப்பியம் இளம்பூரணத்தில் இன்ன இன்ன துறைக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டன என்று பழையவுரை காட்டுகிறது. அதன்படியே ஆராய்ந்தால் ஆங்கு ஆங்கு அவைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியத்திலும் ஒன்று மேற்கோள் காட்டப்பட்டதாகவும் நம்பியகப் பொருளில் இரண்டடி மட்டும் மேற்கோளாகக் காட்டப்பட்டதாகவும் பழையவுரை கூறுகிறது. அதன்படியே யமைந்திருக்கக் காண்கின்றோம். பழையவுரை பொழிப்புரையாகவும் சில பாடல்கட்கேயுள்ளனவாகவும் தெரிகிறது. துறையும் சில பாடல்கட்கே வகுத்திருப்பதாகத் தோன்றுகிறது. கைந்நிலை நூல் வரலாறு இதுவே.

இன்னிலை, கைந்நிலை என்ற இரு நூல்களிற் பதினெண் கீழ்க்கணக்கின் இறுதியாக நிற்கத்தக்க நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இனித் தமிழ்மொழிப் புலவர் கடமையாம்; இவ்விரு நூல்களுக்கும் விளக்கவுரை வரைவித்து அச்சிற்பதித்து வெளியிடுவது நம் கடமையாம் எனக் கழகத்தார் கருதினர். இவ்விரு நூல்களுக்கும் உரையெழுதும் கடமை எனக்குரியதாயிற்று. கழகப் பணியாளர்களில் ஒருவனாதலின் மறுத்தற்கு வழியின்றி ஏற்று என் சிற்றறிவிற் கெட்டியவாறு உரை வரைந்து தந்தேன்.

கைந்நிலையுரை

கைந்நிலை என்ற நூலுக்குப் பழைய வுரை யொன்று இருந்ததாகத் தெரிகிறது. அனந்தராம ஐயரவர்கள் 1931 ஆம் ஆண்டில் பதிக்கப்பட்ட புத்தகத்தில் 60 பாடல்கள் காணப்படுகின்றன, குறிஞ்சியில் 12, பாலையில் 7, முல்லையில் 3, மருதத்தில் 11, நெய்தலில் 12 ஆகிய 45 பாடல்கள் முழு