வடிவம் உள்ளன. மற்றவை உரு அறியப்படாத சிதைந்த வடிவுடையன. செல்லரித்த ஏட்டில் உள்ளபடி பதிக்கப் பட்டதெனத் தோன்றுகிறது. அக்கவிகளின் காட்சி, முதல் தெரிவன சில, இறுதி தெரிவன சில, இடை தெரிவன சில, அடி முழுவதும் தெரிவன சில, அடியிற் பாதி தெரிவன சில, சீர் ஒன்று தெரிவன சில, இரு சீர் தெரிவன சில, முழுச்சீர் தெரிவன சில இவ்வாறு பல வேறுபாடுடையன. இவற்றை அவர்கள் பதித்தபடியே எழுதி அவ்வடிவிற் காணப்படுந் சொற்களுக்கு மட்டும் பொருள் வரைந்தேன். பழைய வுரையாக அப்பதிப்பிற் காணப்படுவன பொழிப்புரையே. விளக்கமும் உள்ளுறையும் இல்லை. அவ்வுரையும் 18, 19, 20, 21, 22, 23, 24, கவி 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 54, 55, 58, 59, 60 ஆகிய 21 கவிகட்கே யமைந்திருக்கின்றன. மற்றவைகட்கு உரை இதுவரை யாரும் எழுதி வெளியிட்டதாகவும் தெரியவில்லை. வேறு இலக்கியங்களில் மேற்கோள் காட்டப்பட்டு ஆசிரியர்களால் பொருள் விளக்கங் காட்டப்பட்ட கவிகளாகவும் இல்லை. ஆதலால் வருந்தி யுரை காண வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என்னால் இயன்ற வரை துறை கண்டு சொற்பொருள் தந்து விளக்கங் காட்டி இலக்கணக் குறிப்புங் காட்டி யாவர்க்கும் பொருள் எளிதில் புலப்படுமாறு விரித்துரை வகுத்தேன். பாட வேறுபாடு மிகுதியில்லை. அதில் உள்ள சொற்களைக் கொண்டே பொருள் விளக்குவது இடர்ப்பட்ட செயலாக இருந்தது. ஆயினும் என் சிற்றறிவிற் கெட்டியவரை கண்டு வரைந்தேன். கற்றுவல்ல சான்றோர் இக்கவிக்குப் பொருள் இது வன்று, இது சிறப்பில்லாப் பொருள். இது தான் சிறந்த பொருள் என எடுத்துக் காட்டின் அதனை யாய்ந்து மறுமுறை பதிக்குமாறு கழகத்தாரை வேண்டுகின்றேன். பழையவுரை நான் பார்த்ததேயன்றி அப்பொழிப்பின்படி சொற்பொருள் வரைந்திலேன்