ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால்
இயற்றப்பெற்றது. சிலப்பதிகாரத்தையடுத்துச் சிறப்பாகப் போற்றப்பெறும்
இந்நூலினை ஏட்டுச்சுவடிகளிலிருந்து பெயர்த்தெழுதி, அரும் பதவுரை, குறிப்புரை
முதலியன சேர்த்து அச்சிட்டு வெளியிட்டவர் டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்
அவர்களாவர். அவர்தம் பதிப்புமுறை முதலியன தமிழகத்தால் பாராட்டப்பெற்றன.
சிலப்பதிகாரத்தைப் போன்றே இதன்கண்ணும் முப்பது காதைகள் அமைந்துள்ளன.
பௌத்தமதக் கொள்கைகளைச் சுவைபடக் கூறும் இந்நூல் கதைப் பகுதியினாலும்,
சொற்சுவை பொருட்சுவைகளாலும் சிறந்தோங்கியிருத்தல் கருதித் தமிழ்ப் பெருமக்களால்
பெரிதும் பாராட்டப் பெறுகின்றது.
பாகனேரிச் செந்தமிழ் அன்பர் மு. காசி விசுவநாதன் செட்டியாரவர்கள் நாவலர்
ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களைக்கொண்டு சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதுவித்து
வெளியிட்டது போலவே இந்நூலுக்கும் உரையெழுதுவித்து வெளியிட விரும்பினார்கள்.
அவ்வாறே இருப்பத்தாறு காதைகளுக்கு நாட்டார் அவர்களால் உரையெழுதப் பெற்றது.
உடல்நிலை காரணமாக அதற்கு மேல் அவர்களால் எழுத இயலாமற் போயிற்று. பிற்பகுதி
நான்கு காதைகட்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பேரறிஞராக
விளங்கிய ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரையெழுதி உதவினார்கள்.
அவர்கள் உரையும் திறமும், பாராட்டற்குரியன.
கழகத்தின் ஆட்சியாளராயிருந்த திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள்
உரையாசிரியர்களைக்கொண்டு உரையெழுதுவிக்கப் பேருதவி செய்தார்கள்.
அன்பர் பலர் வேண்டுகோட்கிணங்கி இந்நூலும் உரையும் இப்பொழுது கழகத்தின்
வழியாக வெளி வருகின்றன். அறிஞர் பெருமக்களும் தமிழன்பர்களும் இதனை வாங்கிப்
பயன்பெற விரும்புகின்றோம்.
{சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தார்}
|