ஆராய்ச்சி முன்னுரை

ஐயம் கொள்க,' என்று சொன்னாள்; மணிமேகலை, ஆதிரைமனையிற் புகுந்து வாய்பேசாமல் ஓவியப் பாவைபோல் நின்றாள். நின்றவுடன், ஆதிரை தொழுது வலங்கொண்டு அமுதசுரபியின் உள்ளிடம் நிறைய, 'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக.' எனக் கூறி, ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை அள்ளியிட்டாள்.

ஆதிரையளித்த பிச்சையை முதலில் ஏற்று அமுதசுரபியிலுள்ள சோற்றுத்திரளையைப் பசியால் வாடிய பலர்க்கும் வழங்கினாள்; அது வழங்குந்தோறும் குறையாமல் வளர்ந்து ஏற்போர் பசியைப் போக்கி விளங்கிற்று. அதுகண்ட காயசண்டிகை, 'அன்னையே! என் தீராப் பசியையும் தீர்த்தருளுக,' என்று வேண்டி நின்றாள். உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒருபிடி அமுதை எடுத்து அவள் கையில் இட்டாள். அதனை உண்டு பசிதீர்ந்த காயசண்டிகை, தனக்குக் கொடு நோய் வந்த வரலாற்றைக் கூறித், தன் பசிதீர்த்தமைக்கு நன்றிபாராட்டி, 'நான் என் நாட்டிற்குச் செல்வேன்; நீ இந் நகரிலே முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு; அதில் பலரும் வந்து புகுதற்காக எப்பொழுதும் வாயிற்கதவு திறந்துள்ள 'உலகவறவி' என்னும் அம்பலம் ஒன்றுளது. அதில் மிக்க பசியுற்றோர், பிணியுற்றோர் முதிலியோர், உணவிடுவோரை எதிர்பார்த்திருப்பார். ஆதலின், நீ ஆங்கே செல்க,' என்று கூறிவிட்டு அவள் தன் ஊர்க்குச் சென்றனள்.

பின் மணிமேகலை வீதியின் ஒருபக்கத்தே ஒதுங்கிச்சென்று உலகவறவியை அடைந்து அதனை மும்முறை வலம்வந்து பணிந்து அதிலேறிச் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வணங்கி அமுதசுரபியுடன் தோன்றி, "இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும்; உண்ணுதற்கு விருப்பமுள்ள யாவரும்வருக," என்று கூறப், பலரும்வந்து உண்பாராயினர். ஆதலின், அவ்வம்பலத்தில் உண்ணும் ஒலிமிகுந்தது.

மணிமேகலை பிக்குணிக்கோலத்துடன் ஐயக்கடிஞைகொண்டு ஐயமேற்று, உலகவறவியிற் சென்றாளென்பதைக் கேள்வியுற்ற சித்திராபதி மனங்கொதித்துப் பெருமூச்செறிந்து கலங்கி, "மணிமேகலையின் இச்செயலை ஒழிப்பேன்," என எண்ணிக்கொண்டு, கூத்தியல் மடந்தையர் எல்லோரையும் பார்த்து, "கோவலன் இறந்ததுகேட்டு மாதவியானவள் முனிவர்கள் பள்ளியை அடைந்து தவக்கோலம் பூண்டிருத்தல் நகைக்கத்தக்கதே; நம் குலவொழுக்கத்துக்குத் தவக்கோலம் ஒவ்வாதது; மாதவி மகள் மணிமேகலையின் பிக்குணிக்கோலத்தை மாற்றி அவளைப் பலநாட்களாக விரும்பியிருக்கும் உதயகுமரனால், அவனது தேரில் ஏற்றுவித்து வருவேன்; அவ்வாறு செய்யேனானால், குடிக்குற்றப்பட்டு ஏழு செங்கல்லைத் தலைமேலேற்றிக்கொண்டு நாடகவரங்கைச் சுற்றிவந்து பழியோடிருக்கும் நாடகமகளிர்போல, இனி நான், நாடகக் கணிகையர் மனையிடத்துச் செல்லேனாகுக," என்றுசூளுரைகூறி உதயகுமரன் இருப்பிடத்தை வந்து சேர்ந்து அவனை வாழ்த்தி வணங்கி, மணிமேகலை உலகவறவியை அடைந்த செய்தியைக் கூற, அவன் மணிமேகலயை உவவனத்திற் கண்டது முதல் நிகழ்ந்தவற்றைக் கூறி அவளிடமுள்ள சிறப்புத்தன்மையைப் பாராட்டினான். சித்திராபதி அவன் உள்ளம் திரியமொழிகள் பலவற்றைக் கூறினாள் ; அவன் மனம் மாற்றமுற்றுத் தேரேறி உலகவறவியை அடைந்து பலர்க்கும் உண வளித்துக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு அருகிற்சென்று, "நீ தவக்கோலம் பூண்டது யாது கருதி?" என்று வினவினான். மணிமேகலை, "பழம்பிறப்பில் கணவனாக இருந்த இவனை வணங்குதல் முறையாகும்," என்று எண்ணி வணங்கி,