"பிறத்தலும் மூத்தலும்
பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்,"
என்று கூறி, வேற்றுருக்கொள்ள நினைந்து கோயிலினுள்ளே சென்று சம்பாபதியை
வணங்கி, முன் மணிமேகலாதெய்வம் தனக்கு அருளிச் செய்த மந்திரத்தை யோதிக்
காயசண்டிகை வடிவமுற்று அமுதசுரபியை ஏந்தி வெளியே வந்து நின்றாள். அவன் அங்ஙனம்
வேற்றுரு வெய்தி வந்ததை அறியாத உதயகுமரன், "உள்ளே சென்ற மணிமேகலை சம்பாபதி
கோயிலினுள்ளே ஒளித்துச்கொண்டாள்" என்று பிறழ நினைந்து சென்று, சம்பாபதியை
வணங்கி, "மணிமேகலை பிச்சைப் பாத்திரத்தைக் காயசண்டிகையின் கையிற்
கொடுத்துவிட்டு ஒளித்துக்கொண்டாள். இங்குள்ள பாவைகளுள்ளே யான் அவளை எவ்வாறு
அறிவேன்; நீ அவளை எனக்குக் காட்டாயானால், பலநாட்கள் செல்லினும் நான்
இவ்விடத்திலேயே கிடப்பேன்; மணிமேகலையை இங்கே விடுத்துவிட்டு, நான்மட்டும்
போகேன்; திருவடியைத் தொட்டேன்," என்று குளுரைத்தான்.
உதயகுமரன் சம்பாபதியை வணங்கி இவ்வாறு கூறுகையில், அவன் கேட்கும்படி, "நீஎம்பெருமாட்டியின்
முன் ஆராய்ந்துபாராமல் சூளுறவு மொழிந்தனை; அதனால் யாதொரு பயனுமில்லை,"
என்று ஆங்குள்ள சித்திரங்களுள் ஒன்றிற் சார்ந்துள்ள ஓர் தெய்வங் கூறிற்று.
அவ்வுரை கேட்டு அவன் மனங்கலங்கினான்; "மணிமோகலையை மறப்பாயென்று முன்கூறிய
தெய்வமொழியும் பிறவும் வியப்புத்தருவதாக இருக்கின்றது. மணிமேகலையின் செய்தியை
அறிந்துகொண்ட பின்பு அறிவோம்," என்று துணிந்து மீண்டு தன் இருப்பிடத்தைச்
சேர்ந்தான்.
மணிமேகலை, "இனி நம் வடிவோடு திரிதரின் உதயகுமரன் நம்மை விட்டு நீங்கான்;
ஆதலின், நாம் காயசண்டிகைவடிவங்கொள்ளுதலே நன்று," என்று எண்ணி, அவ் வடிவுகொண்டு
சம்பாபதியின் கோயிலிலிருந்த அமுதசுரபியைக் கையிலேந்திக்கொண்டு எங்குஞ்
சென்று பசித்துவந்தோர் யாவர்க்கும் உணவளித்து வருபவள், ஒருநாள் அந்நகரிலுள்ள
சிறைக்கோட்டத்திற் புகுந்து, அங்கே பசியால்வருந்து வோர்க்கெல்லம் இன்மொழி
கூறி, உணவருத்திவருவாளாயினாள். அவள் ஒரு பாத்திரத்திலிருந்தே பலர்க்கும்
உணவளித்து வருதலைக் கண்ட சிறைக்காவலர் மிக்க வியப்புற்று, 'இதனை அரசனுக்குத்
தெரிவிப்போ,' மென்று கருதி, அரசன்பாற்சென்று, "மாவண்கிள்ளி, ஊழி தோறூழி
ஒளியொடு வாழி," என்று வாழ்த்தி, "யானைத்தீ என்னும் நோயால் வருந்தி
உடல்மெவிந்து திரிந்த ஒருத்தி சிறைக்கோட்டத் துள்ளே புகுந்து, நின்னை
வாழ்த்திக், கையிடத்துப் பிச்சைப்பாத்திரம் ஒன்றேகொண்டு அங்குவந்து
மொய்க்கின்ற எல்லோர்க்கும் உணவு சுரந்து ஊட்டுகின்றாள். இவ் வதிசயத்தைத்
தெரிவிக்கவேவந்தோம்," என்றனர். அதனைக் கேட்ட அரசன், "அம் மங்கையை
இங்கே அழைத்துவருக," என்று கட்டளையிட்ட பின், உடனே காவலாளர் வந்து தெரிவிக்க,
அவள் சென்று அரசனைக்கண்டு வாழ்த்தி நின்றனள். அரசன், "அரிய தவமுடையாய்.
நீ யார்? நின் கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?" என்றான்.
அவள், "அரசே! யான் விஞ்சைமகள்; இப்பதியிலே வேற்றுருக்கொண்டுதிரிந்தேன்;
இதுபிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு ஈந்தருளியது.
|