ஆராய்ச்சி முன்னுரை

சிறையுண்டிருந்தபோது அவளைச் சிறையினின்றும் மீட்டற்காக மாதவி சுதமதி என்னும் இருவருடன் இராமாதேவிபால் வந்து அவகட்கு அறங்கூறி, பின் மணிமேகலைக்குப் பேதைமை முதற் பன்னிரு நிதானங்களையும் விளக்கி, அவற்றின் பகுதிகளைப் பின்புசொல்லதாகக் கூறிவிட்டுச் செல்கின்றார்.

மணிமேகலை கச்சிநகரில் இருந்து அறஞ்செய்வதாகக் கேள்வியுற்று மாதவி சுதமதியுடன் அவள்பால் சென்று அவள் இட்ட உணவையுண்டு; அவள் தனக்கு அறவுரை கூறவேண்டுமென்று வேண்ட, அவ்வாறே அவட்கு உரைக்கின்றார். இவர் முற்றும் பற்றற்ற முனிவராயினும் மணிமேகலை சிறையிலிருந்த புன்கண் நிலைகண்டு இரங்கி இராசமாதேவிபால் விடுவிக்க எண்ணி வந்ததால் அவரின் அருட் பண்பு காணக்கிடக்கின்றது.

5. காஞ்சனன்: இவன் காயசண்டிகையின் கணவன் ; மணிமேகலை காயசண்டிகை வடிவமாக அறஞ்செய்திருந்தகாலை இவன் அவளைத் தன் மனைவியென்றே கருதிக் காதல்மொழி பேசுகின்றான். அவள் அதனை உன்னித்துக் கேளாதிருந்தும் அது குறித்து நன்கு ஊன்றியெண்ணாமல் அவளைத் தன் இல்லாள் என்றே துணிந்து விடுகின்றான். பின்னர் உதயகுமரன் மணிமேகலையைக் கண்டு அவள் இன்சொல்லேனும் கேட்கலாமென விழைந்து நள்ளிரவில் வந்தகாலை இவன் உதயகுமரனை வாளால் எறிந்து கொன்று விடுகின்றான். இதனால், இவன் மாவண்கிள்ளியால் 'தகவில னாயினன்'' என்ற சொற்கு இடனானவனாய் அவனைக் கொன்ற கடும்பழி சூழ்தற்கு உரியனாகின்றான். இதனால் இவன் எதையும் நன்கு ஆராயாது விரைந்து செய்யும் குண முடையவனாகக் காணப்படுகின்றான்.

6. பெண்டிர்: இனிப் பெண்பாலாருள் மாதவியும் சுதமதியும் நற்குண நற்பண்பு வாய்ந்தவராய், மணிமேகலையுடன் நெருங்கிய தொடர்பு நீங்காதவராய், அறவணர்பால் அறங்கேட்டு ஒழுகிவரும், பண்பினராயிலங்குகின்றனர். ஆதிரை சிறந்த கற்புடையவளாய்த் தன் கணவன் சாதுவன் சாவுற்றானென்று கருதி நெருப்பு வளர்த்து அதன் கண்புகும் தன்மையுடையவளாகின்றாள். அதனால் இவளின் திண்மை பெற்ற கற்புக் காணப்பெறுகின்றது. இவளால் முதன் முதல் மணிமேகலையின் பிச்சைப்பாத்திரத்தில் 'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறு'கென ஆரமுது இடப்படுகின்றது, இதனால் இவள் எல்லாவுயிர்கள் மேலும் கொண்டுள்ள பெண்மைப் பண்பாம் இரக்கவுணர்வு புலனாகின்றது

7. சித்திராபதி: மாதவியின் தாய்; இவள் கணிகையர்க்குள்ள கரவுச்சூழ்ச்சி மிக்கவள் ; இவள் உதயகுமரனைக் கொண்டு மணிமேகலையின் தவக்கோலத்தைக் குலைக்க எண்ணி உதயகுமரன்பாற் சென்று 'மணிமேகலை உனக்கே உரியள்,' என்று அவன் மனத்தை நிலைதடுமாறச் செய்கின்றாள்; அதனாலேயே உதயகுமரன் கொலையுண்டு மாள நேர்ந்தது. ஆகலான், பொருட்பெண்டிர்க்குரிய பொய்ம்மைத்தன்மையெல்லாம், இவள் தன் சொற்களினால் தெற்றெனப் புலனாகின்றது. இவள் மாதவி துறவைக் குறித்துப் பேசுங்கால்,

       ''கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி
       மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
       நகுதக் கன்றே நன்னெடும் பேரூர்
       இதுதக் கென்போர்க்கு எள்ளுரை யாயது''    (18: 7 - 10)