ஆராய்ச்சி முன்னுரை

என்று கழறுவதால் இவள் கணிகைக்கோலத்தையும் கணிகையர்க்குரிய குணஞ்செயல்களையும் சிறந்தனவாகக் கொண்டிருந்தாள் என்பது பெறப்படுகின்றது.

இக் காதைத் தலைவியாகிய மணிமேகலை பேரழகு மிக்கவள் ; இளமைச் செவ்வியுடையவள். இதனை இவள் தோழியாகிய சுதமதி யென்பாள் இவள் மலர் கொய்தற்கு, உவ்வனம் செல்லப் புக்ககாலை,

       "மணிமே கலைதன் மதிமுகந் தன்னுள்
       அணிகெழு நீலத்து ஆய்மலர் ஒட்டிய
       கடைகெழு மணிநீர் கண்டனன் ஆயின்
       படையிட்டு நடுங்குங் காமன் பாவையை
       ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ"      (3: 20 - 4)

என்று பாராட்டிக் கூறுவதால் அறியப்பெறும்.

இவள் தன் தந்தை கோவலன், கொலையுண்டு இறந்ததைக்கேள்வியுற்றுக் கண்ணீர் விட்டுக் கலங்கியழுவதும் மணிபல்லவத் தீவில் மணிமேகலா தெய்வம் கொணர்ந்து சேர்த்தபோது, தனித்திருக்க ஆற்றாது)

       "சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை
       நனவோ கனவோ என்பதை அறியேன்
       மனநடுக் குறூஉம் மாற்றந் தாராய்
       வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்
       எல்வளை வாராய் விட்டகன் றனையோ
       விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
       வஞ்சஞ் செய்தனள் கொல்லோ அறியேன்
       ஒருதனி அஞ்சுவென் திருவே"            (8: 20 - 27)

என்று புலம்புவதும் காணின், அவள்தன் மெல்லிய இயற்கைத்தன்மையும், இளம் பருவ நிலையும் நன்கு புலனாகின்றன.

இவளை உதயகுமரன் காதலித்ததாக வயந்தமாலை மாதவிக்குக் கூறியபோது, இவளுக்கு உதயகுமரன்பால் காதல் உணர்வு அரும்புகின்றது. பின் உதயகுமரன் இவளைப் பல்லிடங்களில் தொடர்ந்தும் தனது கல்வியறிவினாலும், சமய நூலறிவு, தன் கொள்கை முதலியவற்றாலும், தன் மனத்தை அடக்கிக்கொள்கின்றாள். உதயகுமரன் விஞ்சையனால்வெட்ண்டு இறந்தபோது ஆறாத்துயருற்றுத், தான்பெற்றிருந்த காயசண்டிகைக் கோலம் நீங்கி. உண்மைவடிவு பெறுகின்றாள் ; அவன்

வடிவைக் காண்டொறும் காண்டொறும் அவள் கருத்தை ஈர்த்துக் காதலன்பு கலத்தலும் தான் முன்பிறப்பில் ஆராக் காதலால் தீயில் விழுந்திறந்த செய்தியைச் சொல்லி அரற்றி அழுகின்றாள். பின் அவனைத் தழுவிக்கொள்ளச் சென்று நெருங்குதலும், ஆண்டிருந்த கந்திற் பாவை ''செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண்,'' என்று கூறித் தடுத்து நிறுத்துகின்றது.

பின்பு இவள்காரணமாக உதயகுமரன்கொலையுண்டமை, முனிவர்களால் அரசற்கு அறிவிக்கப் பெறுகின்றது. அரசனால் சிறையில்வைக் கப்படுகின்றாள்; அதுகாலைத் தன் மகன் இறந்த துன்பம் பொறுக்கலாற்றாத இராசமாதேவி, இவளாலேயே தன் மகன் வீயநேர்ந்ததென்றுமணிமேகலைபால் வஞ்சினங்கொண்டு ஒறுக்கஎண்ணி, இவளைச்சிறையினின்றும் விடுவிக்கச்செய்து இவளைக் கற்பழிக்க கல்லாக் கயவன் ஒருவனை அனுப்புகின்றாள்; அவன் சென்றவுடன் மணிமேகலை ஆணுருவெய்துகின்றாள் ;