ஆராய்ச்சி முன்னுரை

கயவன் அஞ்சி வெளிச்சென்று விடுகின்றான்; அப்பால் எல்வாற்றானும் இவட்கு ஊறு செய்வதையே கருத்தாகக்கொண்டு புழுக்கறையில் அடைத்தும், நஞ்சூட்டியும் இவள் இறவாமை கண்டு இராசமாதேவி,

ஐயென நடுங்கி ''செய்தவத் தாட்டியாகிய உனக்குச் சிறுமை செய்தேன் ; என் மகன் இறந்துபட்ட துன்பம் பொறுக்கலாற்றாது செய்த தீவினையைப் பொறுக்க,'' என்று அடிவணங்கி நிற்கின்றாள். அதுகாலை மணிமேகலை, இராசமாதேவியை நோக்கி,

"பூங்கொடி நல்லாய்....................
எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்." (23: 72-79)

என்று அவட்கு நல்லுரை கூறி, அவள் மகன் முற்பிறப்பிற் செய்த தீவினை காரணமாகக் கொலையுண்டு, இறக்க நேர்ந்ததையும் விளக்கிக் கூறி அவள் துன்பத்தை மாற்றி ஞான நன்னீர் நன்கனம் தெளித்து அறிவுறுத்துகின்றாள். அவள் மனந்தெளிந்து வணங்குகின்றாள் ; மணிமேகலை ஆக்கலும், அழித்தலும் உடைய மந்திரவலி பெற்றிருந்தும் இராசமாதேவிக்கோ பிறர்க்கோ யாதொரு துன்பமுஞ் செய்ய எண்ணாது பொறுமையோடு இருந்து தவத்திறத்தின் வழுவாது ஒழுகிவந்தமையால், இவள் தன் சான்றாண்மையும், நல் இரக்கவுணர்வும் புலனாகின்றன. பின்னரும் இவள் காணார் கேளார் முதலியோர்க்கு உணவூட்டுதலையே விரும்பி வந்தமையால் இவள் பிறர் புன்கண் அஞ்சும் பண்பே பெருஞ்செல்வமாக்க் கொண்டு ஒழுகினாள் என்பது நன் கறியலாம்.

இறுதியில் சமயக்கணக்கர்பால் அவரவர் கொள்கை வேறுபாட்டைக் கேட்டுணர்ந்து, உண்மைதெளிந்து அறவணவடிகள்பால் மெய்ப் பொருளை வணங்கிக் கேட்ப அவர், புத்த நெறியைத் தொகுத்தும் விரித்தும் கூற அதைக் கேட்டுச் சிந்தித்து, 'தவத்திறம் பூண்டு, பவத்திறம் அறுப்பே, 'னென நோற்கலானாள். இதனால் மணிமேகலைக்குத் தன் பிறவிப் பிணிப்பு நீங்கி வீடுபேறடைவதிலேயே குறிக்கோள் இருந்ததென்பதும் அவள் அதைக் கண்டு தெளிதற்கே பல்லிடங்கட்குச் சென்றதும் பிறவும் நன்கு தெளியப்படுகின்றது.

நூற் பயன் ;

இத்தகைய சிறப்பியல்பு வாய்ந்த மணிமேகலை வரலாறுகளால் இப்பெருங் காப்பியத்தை ஆயுந்தோறும் ஆயுந்தோறும் இன்ப ஊற்றாய் அன்பின் ஆறாய் அமைந்து, முற்கால நம் நாட்டின் அறநெறிப் பண்பும், நாகரிகமும், செல்வ வளங்களும், மக்கட் பிறப்பின் மேன்மை பிறவும் கண்டுணர வாய்ப்புடைத்தாய்த் தண்டமிழ்மொழியின் ஒண்சுவைகாண்பார்க்கு ஒரு நற்றுணையாக வாய்ந்து ஒளிர்ந்து உயரிய காப்பியமாகத் திகழ்வதால், இந்நூல் மக்களெய்தும் பயன் யாவும் ஒருங்கே ஈத்துதவும் அருங்கற்பக தருவாய்த் தழைத்து என்றுமுள தென்றமிழ்க்கு ஏற்ற அணியாய் அமைந்து மிளிர்வது நம் தமிழ்நாட்டின் அரும்பெறல் சிறப்புக்குரியதாகும்.

திருவள்ளுவர் யாண்டு - 1982 } செல்லூர்க்கிழார்,செ.ரெ.இராமசாமிபிள்ளை.  
கர்த்திகைத் திங்கள் - 21. சென்னை - 1.