பதிகம் - (கதை பொதி பாட்டு)

[சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அப் பெயரும், சம்பாபதி யென்னும் பெயரும் உண்டானமை புனைந்துரை வகையாற் கூறப்படுகின்றது. ஆதிப்பிரம சிருட்டியிலேயே அப்பதி சம்பாபதி என்னும் பெயருடன் படைக்கப்பட்டதென்பது அதன் எல்லையற்ற பழமையையும் நாவலந் தீவிற்கே அது முதன்மையான பதி என்பதையும் காட்டுவதாகும். காவிரியானது 'கோடாச் செங்கோற் சோழர்தம் குலக்கொடி,' என்றும், 'கோள்நிலை திரிந்து கோடை நீடினும், தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை,' என்றும் அருமை பாராட்டிப் புகழப்படுகின்றது. சம்பாபதி யென்னும் தெய்வத்தானும், காவிரியானும் இருபெயரினைப் பெற்ற அம்மூதூரின்கண் இந்திரவிழா அறைந்தது முதலாகக் காஞ்சி நகரின்கண் பவத்திறம் அறுகெனப்பாவை நோற்றது இறுதியாகவுள்ள வரலாற்றினை இளங்கோவடிகள் கேட்டருள, கூலவாணிகன் சாத்தன் என்னும் நல்லிசைப்புலவன் மணிமேகலை துறவு என்னும் காப்பியத்தின் முப்பது பாட்டினுள் யாவருமறிய இயற்றியருளினன்.]


   இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
   விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
   பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
   தென்றிசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம்
5  சாகைச் சம்பு தன்கீழ் நின்று
   மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
   வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற
   சம்பு வென்பாள் சம்பா பதியினள்
   செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
10  கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
   அமர முனிவன் அகத்தியன் றனாது
   கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை