பதிகம் - (கதை பொதி பாட்டு)


   செஙகுணக் கொழுகியச் சம்பா பதியயல்
   பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
15 ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள்
   ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு
   ஆணு விசும்பின் ஆகாய கங்கை
   வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப்
   பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டீங்கு
20 அன்னை கேளிவ் வருந்தவ முதியோள்
   நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப்
   பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
   கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
   கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
25 தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை
   தொழுதனள் நிற்பஅத் தொன்மூ தாட்டி
   கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து
   தெய்வக் கருவுந் திசைமுகக் கருவும்
   செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
30 என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர்
   நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென
   இருபாற் பெயரிய உருகெழு மூதூர்
   ஒருநூறு வேள்வி உரவோன் றனக்குப்
   பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச்
35 சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான்
   வயந்த மாலையான் மாதவிக் குரைத்ததும்
   மணிமே கலைதான் மாமலர் கொய்ய
   அணிமலர்ப் பூம்பொழில் அகவயிற் சென்றதும்
   ஆங்கப் பூம்பொழில் அரசிளங் குமரனைப்
40 பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும்
   பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்
   துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
   மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்
   மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும்
45 உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வதம்
   சுதமதி தன்னைத் துயிலெடுப் பியதூஉம்