ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள்
தான்றுயி லுணர்ந்து தனித்துய ருழந்ததும்
உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப்
50 பழம்பிறப் பெல்லாம் பான்மையி னுணர்ந்ததும்
உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வந் தோன்றி
மனங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும்
தீப திலகை செவ்வனந் தோன்றி
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும்
55 பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும்
அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம்
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பால்
60 சிந்தா தேவி கொடுத்த வண்ணமும்
மற்றப் பாத்திரம் மடக்கொடி யேந்திப்
பிச்சைக் கவ்வூர்ப் பெருந்தெரு வடைந்ததும்
பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையிற்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
65 காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று
ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழை யென்றே
கொங்கலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்
அம்பல மடைந்த அரசிளங் குமரன்முன்
70 வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி
மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்
அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன்
ஆயிழை தன்னை அகலா தணுகலும
75 வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும்
ஐயரி யுண்கண் அவன்றுயர் பொறாஅள
தெய்வக் கிளவியிற் றெளிந்த வண்ணமும்
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
80 சிறைசெய் கென்றதுஞ் சிறைவீடு செய்ததும